பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றோர் பெருந்தகை மு.வ.

165

“வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில் கரும்பு ஆவதில்லை. பனை தென்னை ஆவதில்லை; புலி பசு ஆவதில்லை. நாய் நரி ஆவதும் இல்லை. காரணம், அவற்றின் பண்பை மாற்றி அமைக்கும் மன வளர்ச்சி இல்லை; மனித மனம் வேம்பாக இருந்து கரும்பாக மாறலாம்; புலியாக இருந்து பசுவாக மாறலாம்; மனிதர்க்கு மன வளர்ச்சி உண்டு.”

“எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும். அது தான் பெரிய அடிப்படை.”

“அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது.”

“உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.!”

“குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனி. அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.”

“விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.”

“இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்கவல்லவரைத் தேடு உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித் தான் தேட வேண்டும்.”

(அல்லி)