பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்

29

சிறையிலிருந்துகொண்டு தம் அன்னை, ஆருயிர்த் துணைவி, நண்பர்கள் முதலியோருக்கு இவர் எழுதிய கவிதை மடல்கள் நெஞ்சையுருக்கும் நீர்மையன; செந்தமிழ் நலம் தோய்ந்த சீர்மையன.

‘மெய்யறம்’ என்னும் பெயரிய நூல் மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெல்லியல் என்னும் ஐந்தியலும் நூற்றிருபத்தைந்து அதிகாரமுமாக முடிந்த நூலாகும். இந் நூலினைத் திருக்குறளின் வழிநூல் எனலாம். எண்வகை வனப்பில் ‘தோல்’ எனும் வனப்புக் கொண்டு, முதுமொழிக் காஞ்சி போன்று திட்ப நுட்பஞ் செறிந்திலங்குவதாகும்.

இந்நூலினைப் பற்றித் திரு. தி. செல்வக்கேசவராய முதலியார்,

“தமிழ்ப் புலவரேயன்றி இங்கிலீஷ் படித்த புலவரிற்
பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது
துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின்
அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு
விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக
என்பது என் வேண்டுகோள்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பாடற்றிரட்டு’ என்னும் நூல் இரு பாகங்கள் கொண்டது; சிறை வாசத்திற்கு முன் பாடிய பாக்கள் முதற்பாகமாகவும். கோயமுத்துார் கண்ணனூர்ச் சிறைவாச காலத்தில் பாடிய பல தனிப்பாக்கள் இரண்டாம் பாகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் எல்லாம் நவின்றோர்க்கினிய நன்மொழிகளால் விழுமிய பொருள் பயக்குமாறு இனிய ஓசை கொள்ள யாக்கப்பட்டுள்ளன. நீதி போதனைச் செய்யுள்கள் பண்டைக்கால நீதி நூற்களோடொப்பத் திட்ப நுட்பங் கொண்டுள்ளன.