பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மூன்றாம் பதிப்பின் முன்னுரை

கோதாவரி ஆற்றினைக் கண்ட கவிச்சக்கரவர்த்தி கம்ப நாடர்க்குச் சான்றோர் கவி நினைவிற்கு வந்தது. இன்று வளமாக வளர்ந்து வாழ்ந்து நிலைத்து நிற்கும் நந்தமிழ் மொழியின் சீர்மையினைக் காணும்பொழுது, இவ்வளமார் மொழியினைச் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்கூறு நல்லுலகத்தில் தோன்றித் தங்களையும் புகழால் வளர்த்துக்கொண்டு, தமிழ் மொழியையும் நிறைவாக வளர்த்த தமிழ்ச் சான்றோர்களை நினைக்காமலிருக்க முடியாது. ஆங்கில மொழி, அரசியல் தொடங்கிக் கல்வி, சமயம், பொருளாதாரம், சமூகம் முதலிய அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந் நூலினைத் தம் திருத்தொண்டால் அணிபெறச் செய்திருக்கும் சான்றோர் பெருமக்கள் அயராது தளராது உற்றதோர் ஊக்கத்தோடு பாடுபட்டதன் விளைவால் தமிழ் தமிழாக நின்றது; நிலைத்தது.

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சா. தொடங்கிச் சான்றான்மைக்கு ஆழி என விளங்கிய என்னுடைய பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு.வரதராசனார் உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் பதின்மரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, இந் நூற்கண் அவர்தம் வாழ்வினையும், வளமார் தமிழ்த் தொண்டினையும் ஒருவாறு புலப்படுத்தியுள்ளேன்.

சைவர்க்குப் பன்னிரு திருமுறை போலவும், வைணவர்க்குப் பன்னிரு ஆழ்வார்கள் போலவும், இந்நூற்கண் இடம் பெற்றுள்ள சான்றோர்களையும், அவர்கள் வளப்படுத்திய தமிழினையும் தமிழுலகு இனங்கண்டு தெரிந்து, அச் சான்றோர்க்கு வாழ்த்தும் வணக்கமும் தெரிவிக்குமேயானால், அது நன்றியுடைய தமிழினத்தின் நெஞ்சப் பண்பாட்டிற்கு விளக்கமாக அமையும். தமிழ் இளைஞர்கள் இச் சீரிய சான்றோர்களின் தமிழ் நெஞ்சத்தைக் காண்பார்களே யானால் முச்சங்கம் வைத்து மொழி வளர்த்த பாண்டியர் பரம்பரையின் மாட்சியினையும் ஒருவாறு விளங்கிக் கொள்வார்கள்.

தமிழகம்

சென்னை-29

19-8-1988

சி.பா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சான்றோர்_தமிழ்.pdf/5&oldid=1007340" இலிருந்து மீள்விக்கப்பட்டது