பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி

51

பலவற்றின் படங்களைத் தொங்கவிட்டிருப்பார். அவர் வாழ்வில் அவருக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கவில்லை. ஊரில் உள்ள குழந்தைகளையெல்லாம் தம் குழந்தையாக எண்ணினார். குழந்தைகள் நெஞ்சம் உருகி நைந்தால் இவரும் உள்ளம் உருகிக் கரைவார். குழந்தைகள் அழுவதைக் காண மனம் பொறுக்க மாட்டார். எனவே குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெரும்பங்கு கொண்டார். ‘மலரும் மாலையும்’ என்னும் தம் கவிதைத் தொகுதியை,

“செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்
கிந்தநூ லுரியதாய் என்றும் வாழ்கவே”

என்று தம்முடைய கவிதை நூலையே தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு உரிமையாக்கினர். தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து தலைப்புகளில் 46 குழந்தைப் பாடல்களைக் கொண்டுள்ளது. இது அன்பர் திரு. மு. அருணாசலம் அவர்கள் முயற்சியால் 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்குழந்தைப் பாடல்கள் 1954ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் பெயரோடு 58 பாடல்களைக் கொண்டு தனியே வெளியிடப்பட்டது. இக் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் நூலுக்கு