பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்

89

தான் முன் மாதிரியாக இருக்க வேண்டுமென்று எண்ணித் தம் மகள்களான மீனாட்சி, லலிதா ஆகிய இருவரும் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் லலிதா பாரதி எனும் இளைய மகள் மேடைக்குச் சென்று காந்தியடிகளிடம் தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்து மேடைக்குச் சென்ற மூத்த மகள் மீனாட்சி பாரதி தம் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு மேடை யினின்று கீழே இறங்கிய பின்னர்த் தன் கையிலிருக்கும் வளையல்களையும் கழற்றித் தர வேண்டும் என்ற எண்ணம் மீதுாரவும், மீண்டும் மேடையேறிச் சென்று தம் கையிலிருந்த வளையல்களைக் கழற்றிக் காந்தியாரிடம் தந்தார், “யாருடைய மகள் இச் சிறுமி?” என்று தம் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து வினவிக் கொண்டே, தம்மிடமிருந்த கதர் மாலை ஒன்றையெடுத்து மீனாட்சி பாரதி கழுத்தில் போட்டார் காந்தியார். அருகிருந்தோர் அடுத்திருந்த நாவலரைச் சுட்டிக்காட்ட, “பாரதியாரின் குழந்தையா! அப்படியானால் அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை” என்று காந்தியார் கூறினாராம். கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற நாவலர், தாம் கழுத்திலிருக்கும் சங்கிலியைக் கழற்றித் தரவேண்டும் என்று மட்டும் கூறியிருந்த அளவில், கை வளையல்களையுங் கழற்றித் தந்த தம் மகள் மீனாட்சியைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.

காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகிச் சிலர் சுயராச்சியக் கட்சி என்றதொரு புதிய கட்சியை உருவாக்கினர். பண்டித மோதிலால் நேருவும் சி.ஆர். தாசும் இந்தியர் ஒத்துழையாமை இயக்கத்தை விட்டு விட்டுச் சட்டமன்றங்களுக்குச் சென்று அங்கே போராடி உரிமைகளைப் பெறவேண்டும் என்றனர். 1926ஆம் ஆண்டில் சி. ஆர். தாசை மதுரைக்கு அழைத்துப்

சா—7