பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்

93

நடத்தினார். இயற்றமிழ்ப் பேராசிரியராக இருந்து கொண்டே இசைத் தமிழ்த் தொண்டும் ஆற்றினார். தேவார திருப்புகழ் வகுப்புகளை அங்கு இசைக்கல்லூரியில் தொடங்கு வித்தார். இவ்வாறு மாட்சியுடன் தமிழ்ப்பணி புரிந்த நாவலர் 1938ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரிடம் கல்வி பயின்றோரிற் குறிப்பிடத் தக்கவர்கள் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், திருவாளர்கள் அ. ச. ஞானசம்பந்தன், க. வெள்ளைவாரணனார், பூ.ஆலாலசுந்தரஞ்செட்டியார், சி. ஆறுமுக முதலியார், இராசரத்தினம் அம்மையார், இராசமணி அம்மையார்,அ. மு. பரமசிவானந்தம், ப. சோதிமுத்து, ஆ, முத்துசிவன், எஸ், உருத்திரபதி, பி. ஆர் மீனாட்சிசுந்தரம் முதலியோர் ஆவர்.

சுப்பிரமணிய பாரதியார் தொடர்பு

கவிஞர் பாரதியாரும் நாவலர் பாரதியாரும் பல வகைகளில் ஒற்றுமைப்பாடு உடையவர்கள், இருவரும் எட்டையபுரத்தினர்; இருவரும் கவிஞர்கள்; பாரதி பட்டம் பெற்றவர்கள்; ஒத்த வயதினர்; இளமையில் மணம் முடித்தவர்கள்: நாட்டுத் தொண்டில் திளைத்தவர்கள்; உணர்ச்சி மிக எழுதுவ திலும் பேசுவதிலும் வல்லவர்கள்; அஞ்சாமையும் வீறும் உடையவர்கள்; தமிழாசிரியர் பணி புரிந்தவர்கள்.

பாரதியார் கவிதையைப் பண்டிதர்கள் எள்ளி நகையாடிய காலத்தில் பாரதியார் கவிதையின் நயத்தை மேடை, கட்டுரை, செய்தித்தாள்கள் வாயிலாகப் பாமரரும் புரிந்து கொண்டு பாராட்டவைத்த தனிப்பெருமை நம் நாவலரையே சேரும்.

“பாரதியார் பாக்கள், கருத்துக்களை வருத்தமின்றி விளக்கும், பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று,