பக்கம்:சாமியாடிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

சு. சமுத்திரம்

ஆத்திரத்தில் திருமலை, துளசிங்கம் வயிற்றில் காலால் உதைத்தான். அந்த வலியை எம்மா' என்று சொல்லித் தாங்கிக் கொண்ட துளசிங்கம், திருமலை மேல் பாய்ந்தான். இருவரும் நின்று கொண்டே அடித்தார்கள். விழுந்து கொண்டே உதைத்தார்கள். எழுந்து கொண்டே ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திக் கொண்டார்கள். பிறகு கட்டிப் பிடித்து உருண்டார்கள். சிமெண்ட் மூட்டைக்குள் சிக்கியபடியே சுழன்று, வாசல் வழியாகப் புரண்டு, சாலையோரமாக பந்து போல் உருண்டு, நாய் போல குலைத்து, நரிபோல ஊளையிட்டு, நண்டு போல சுருண்டு, நடு ரோட்டிற்கு வந்தார்கள். நல்ல வேளையாக அப்போது பஸ்கள் வரவில்லை. வேலையாட்களுக்கோ வாலி-சுக்ரீவன் போரைப் பார்த்துக் கொண்டு நின்ற ராமனின் நிலை. இருவரும் உருண்டு சுருண்டதில், எவன் துளசிங்கம், எவன் திருமலை என்று தெரியவில்லை. திருமலை துளசிங்கத்தை கீழே போட்டு மேலே வரும்போது, செம்பட்டையான் ஆட்கள் அவன் கழுத்தைப் பிடிக்க குனியும் போதே, திருமலை கீழேயும், துளசிங்கம் மேலேயும் வந்துவிடுவான். துளசிங்கம் மேலே தோன்றும்போது, அவனை அந்தரத்தில் தூக்கிப் போட நினைத்த கரும்பட்டையான்கள் அதற்குள் திருமலை மேலே வந்ததைப் பார்த்து, குனிந்த உடம்பை நிமிர்த்தினார்கள்.

அந்தச் சாலைவாசிகள், அனைவருமே கூடிவிட்டார்கள். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, யார் தோற்கிறான் என்பதை கண்டு பிடிக்க அதிக நேரம் ஆகும் என்பதாலும் எவன் படுக்கிறான் என்று தெரிவதற்குள், தத்தம் கடை வியாபாரம் படுத்துவிடும் என்பதாலும், இருவரையும் பிரித்து விட்டார்கள். பிரிந்தவர்கள் சிறிது பின்வாங்கி நின்றபோது பிரிபட்டவர்கள் மீண்டும் பிணையப் போனார்கள். ஒருவருக்கு அலுத்து விட்டது. காண்டிராக்டர் தாமோதரன் பிரித்த ஆட்களை விலக்கித் தள்ளிவிட்டு, இருவரின் கைகளையும் பிடித்து நேருக்கு நேராய் நிறுத்திவிட்டு, கத்தினார்.

"நாங்க யாரும் ஒங்கள பிடிக்க மாட்டோம். உம் பாயுங்க. எவனாவது ஒருவன் கீழே விழுறது வரைக்கும் சும்மாவே இருக்கோம். டேய் ஆஸ்பத்திரிக்கு ஒரு வண்டிய ரெடி பண்ணி வையுங்கடா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/106&oldid=1243562" இலிருந்து மீள்விக்கப்பட்டது