பக்கம்:சாமியாடிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சு. சமுத்திரம்

கோலவடிவு, மத்தாப்பு மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். ஈரப் புடவையைப் பிழிந்து, மூன்றாக மடித்துத் தோளில் போட்டுக் கொண்டு, புறப்பட்டாள். அடடே என்ன சத்தம். ராமையா மாமா சத்தம். துளசிங்கம் மச்சான் சத்தம்.

கோலம் முதலில் ஆனந்தக் கோலமானாள். பின்னர், அப்படியே சோகக் கோலமானாள்.

ராமையா வயல், துளசிங்கம் வயலுக்கும் பக்கத்து வயல். இங்கிருந்தபடியே பேசினால் அங்கே கேட்கும். அந்த வயல் நெற்பயிரைத் துளசிங்கமும், ராமையாவும் கூடவே அக்கினி ராசாவும் சுற்றிச் சுற்றிப் பாக்காவ. கைகளை ஆட்டி ஆட்டி பேசுதாவ. இது என்ன? ராமய்யா மாமா துளசிங்கத்தை அடிக்கப்போறது மாதிரி துள்ளுறாரே. மாமா. அவர திட்டாதயும். திட்டப்படாது.

இப்போது அவர்கள், அந்த வயலின் கிணத்து மேட்டுக்கு வந்து, கோபங் கோபமாய் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. துளசிங்கம் மச்சான் இடது கையில், பிளாஸ்திரி போடப்பட்டு, அது ஒரு துணிக்கட்டில் தொங்கியது. அடக்கடவுளே. ஆனாலும் எங்கண்ணா மோசம். அடிச்சாலும் இப்படியா. பாவம். எப்டி துடிக்காரோ..? எப்படி வலிக்குதோ..?

கோலவடிவுக்கு அந்தப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, துளசிங்கம் மச்சான் கை பிசகியிருக்கா. இல்ல ஒடிஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும். கடவுளே. கடவுளே பிசகி இருக்கணும். ஒடிஞ்சிருக்கப்படாது. இந்தப் பாவி நெத்தியில எந்த நேரம் குங்குமம் வச்சாரோ கை ஒடஞ்சிட்டே. ஒடச்சிட்டானே. நாசமாப் போறவன். கடவுளே... கடவுளே... ஒடிச்சவன் எங்கண்ணான்னு தெரியாம திட்டிட்டேன் பாரு. சரி. இப்போ அந்தப் பக்கம் போகணும். எப்டி போறது. போறதுல தப்பில்ல. பழைய சண்டை விஷயமாயும் ரெண்டு பேரும் பேசலாமுல்லா.

கோலவடிவு யோசித்தாள். அங்கிருந்தபடியே அந்த வயலுக்குத் தாவிக் குதிக்கப் போகிறவள்போல். முன் பாதங்களை அழுத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/112&oldid=1243569" இலிருந்து மீள்விக்கப்பட்டது