பக்கம்:சாமியாடிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சு. சமுத்திரம்

கோழி, பருந்தை நோக்கி பாய்ந்து பிடிப்பதுபோல் சிறிது ஓடிவிட்டு, பிறகு மூச்சு முட்டி நின்றாள். தாயம்மாவுக்கு வேண்டாதவர்கள் உட்பட எல்லோருமே, அவளை பரிதாபமாய்ப் பார்த்தார்கள்.

    தாயம்மா கத்தக்கூட திராணி இல்லாமல் தலையில் கை வைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தபோது, அவளுக்கு உறவுப் பெண்ணான சந்திரா ஆறுதல் சொன்னாள்.
   "ஏன் சித்தி அழுவுறே. நாங்க ஆளுக்குக் கொஞ்சம் இலயும் பேருக்குக் கொஞ்சம் தூளும் தாறோம். ஏமுளா பாக்கிய சித்திக்குக் கொடுங்கழா."
     எல்லாப் பெண்களும் கை நிறைய இலை எடுத்து விரல் நிறையத் தூளெடுத்து தாயம்மாவின் தட்டில் போடப் போனபோது, அலங்காரி இக்கன்னா போட்டுப் பேசினாள்.
    "அவளுக்கு தைரியம் இருந்தா காஞ்சான் மச்சான் கிட்டப்போயி அவரு பய பண்ணுன கோலத்தச் சொல்லி நஷ்டஈடு கேட்கட்டும். அந்த நொறுங்குவான் பண்ணுன காரியத்துக்கு நாம ஏன் அபராதம் கட்டுறது மாதிரி இல கொடுக்கணும்."
    "சரி. நீங்க போடாட்டா இருங்க. நாங்க போடுறோம். மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்குமாம்."
    "இந்த பாரு சந்திரா. மாடு கீடுன்னு பேசுனே மரியாதை கேட்டுப் போவும்."
    "மாடு நல்ல சீவன். கண்டவன் பின்னால எல்லாம் போவாது.” 
    "அப்போ நான் கண்டவன் பின்னால போறவ." 
    "அப்படித்தான் வேணுமுன்னா வச்சுக்கங்க." 
    "ஏழா, சந்திரா, வரம்பு மீறிப் பேசாத."
    "பின்ன என்ன வாடாப்பூ அத்தை...? தாயம்மா சித்தி நம்மள்ல ஒருத்தி. அந்த தூம மவனால. அவ்வளவு இலயையும், தூளயும் பறிகொடுத்துட்டு அந்தரத்திலே நிக்கா. ஆளுக்கு கொஞ்சம் இல கொடுத்தா தேய்ஞ்சா போயிடுவோம். சீ. அறுத்த கைக்கு சுண்ணாம்பு வக்காத ஆளுங்க.."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/12&oldid=1412626" இலிருந்து மீள்விக்கப்பட்டது