பக்கம்:சாமியாடிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாமியாடிகள்

11


"வேணுமுன்னா ஒன் கைய அறுத்துக் காட்டு. நான் சுண்ணாம்பு வக்கேன்."

பாவாடை தாவணி சந்திராவுக்கும், பழுத்த இலை போல் புடவை கட்டிய அலங்காரிக்கும், இடையே தூள் கிளப்ப நடந்த வாய்ச் சண்டையை எல்லாப் பெண்களும் ரசித்துக் கொண்டே இருந்தார்கள். சற்றுத் தொலைவாய் உட்கார்ந்திருந்த தாயம்மாவின் அருகே கிடந்த தட்டில், இலையையும், தூளையும் எடுத்துப் போடப் போனார்கள். ஆனால் தாயம்மா திட்டவட்டமாகச் சொன்னபடியே எழுந்தாள்.

"எனக்கு எவளும் பிச்சை போட வேண்டாம். இந்தப் பேச்சை வாங்கிக்கிட்டு அந்த இலய வாங்குறது ஒவ்வோருத்திய மாதிரி அடுத்தவனுக்கு முந்தானை விரிக்கதுக்கு சமம்..."

சோர்ந்துபோய் நடந்த தாயம்மாவை, எல்லாப் பெண்களும் தாளமுடியாமல் பார்த்துவிட்டு, பிறகு தத்தம் தட்டருகே வந்து உட்கார்ந்தார்கள். தாயம்மா போவதை சட்டை செய்யாததுபோல் குறுஞ் சிரிப்புடன் அலங்காரி பீடி இலை ஒன்றைக் கசக்கிப் போட்டபடியே தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் பேசினாள். "தனக்குப் போவத்தான் தானம். பிச்சை போடறதுக்கு நாம ஒண்ணும் பெரிய இடம் இல்ல..."

சந்திராவுக்குக் கோபம் வெப்பமாகியது.

"இந்தா பாரு... எங்க சித்தி... ஒங்கிட்ட என்ன பிச்சையா கேட்டா? பேச்சை விடேன்... கடைசியில ஒன் புத்தியக் காட்டிட்டே பாத்தியா?"

"எம் புத்திய என்னத்தடி கண்டே? நான் அந்த மனுஷன்கூட இந்த ஊருக்கு ஒடி வந்ததுலே என்ன தப்பு? ஊர் ஒலகத்துல செய்யாததையா செய்துப்புட்டேன்?"

"நான் அதை நினைச்சு சொல்லலே. ஆனாலும் இப்போ சொல்லுறேன். ஓடிப்போறது தப்புன்னாலும், அது பெரிய தப்பில்ல. ஓடி வந்தவன் முதுகுக்குப் பின்னாலயே பிறத்தியாரோட ஒய்யாரஞ் செய்யுறதுதான் தப்பு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/13&oldid=1412716" இலிருந்து மீள்விக்கப்பட்டது