பக்கம்:சாமியாடிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

சு. சமுத்திரம்

138 சு. சமுத்திரம்

இல்லை. இருதரப்பும், புறநானூற்று வீரர்கள் போல் மோதப் போனாலும், அந்தப் பள்ளிக்கூட மைதானத்தில் அப்போதைக்கு செம்பட்டையான் வகையறாக்களே அதிகம். போதாக்குறைக்குத் துளசிங்கம், அந்தக் குடும்பத்தின் இளைஞர்களுக்குக் குஸ்தி என்ற பெயரில் எதையோ சொல்லிக் கொடுத்திருந்தான். அவர்கள் அந்த 'குருவையே ஒரு மாதிரி ஏடாகோடமாய்ப் பார்த்தபோதுதான், அவன் அந்த வித்தைப் பயிற்சியை இடையிலே நிறுத்திவிட்டான். என்றாலும், இந்த வாலிபர்கள் இந்தக் கரும்பட்டையான்களைச் சமாளிக்க கற்றதோர் கைம்மண்ணளவு குஸ்தி; போதும் என்பதுபோல் கைகளைச் சுருக்கி வைத்து நீட்டப் போனார்கள். குஸ்தியாம்.

சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், இருபது பேர் கொண்ட கரும்பட்டையான் கூட்டத்தை நூறு பேர் கொண்ட செம்பட்டையான் கூட்டம் சுற்றி வளைத்தது. அந்தக் கூட்டத்திற்குள் மாட்டிய நாராயணன், பழனிச்சாமியின் தம்பி அருணாசலம், மகன் திருமலை, குள்ளக் கத்தரிக்காய் ராமசாமி, ஆகிய ஒரு சிலர் மட்டும், கிட்ட வாங்கடா என்று பேசினார்கள். ஆனால் அந்தக் குரல்களோ கெஞ்சுவது போல் தான் ஒலித்தன. எதிரிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்ததும், எகிறி எகிறிப் பேசுவது எந்தப் பட்டியில் உண்டோ இல்லையோ இந்தச் சட்டாம்பட்டியின் வழக்கம். கரும்பட்டையான்களைப் பார்த்து செம்பட்டையான்கள் சீறினார்கள்.

"இப்போ கூட லேட்டுல்ல. தெருவிட்டு தெருவுல அடிக்க வந்ததுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு ஒடிப் போங்க. வழி விடுறோம். இல்லன்னா ஒங்கள ஒரு வழி பண்ணாம விடமாட்டோம்."

துளசிங்கம், மனித வளைக்குள் மாட்டிக் கொண்ட திருமலையை ஏளனமாகப் பார்த்தபடியே பேசினான்.

"ஏய். திருமல. இப்ப துள்ளேண்டா..?”

"நீ வேணுமுன்னா ஒத்தைக்கு ஒத்தையா வாறியாடா..? பதினைஞ்சு பேர நூறு பேரு மடக்குறது பெரிய வீரமா..?”

"இது தெரியாம சவுடால் பேசுறது மட்டும் வீரமா..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/140&oldid=1243647" இலிருந்து மீள்விக்கப்பட்டது