பக்கம்:சாமியாடிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இருபுறமும் இருந்து வந்த துளசிங்கமும், கோலவடிவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எதிரெதிராய் வந்து நின்றார்கள். துளசிங்கம், அவளை லேசாகப் பார்த்து விட்டுக் கையில் இருந்த கம்பைத் தலைக்கு மேலே தூக்கி, சிவப்பு வைரங்களாய் மின்னிய ஆலம்பழங்களை அடித்தடித்து விழத்தட்டினான். அப்படி அடித்ததில் ஒரிரு பழங்கள் கோலவடிவின் முன் நெற்றியில் மரகதக் கற்கள் போல் பதிந்தன. அவள், அவற்றை எடுத்து தூர வீசியபடியே, அவனை முகஞ்சுழித்துப் பார்த்தாள். துளசிங்கம், சித்திக்காரி அலங்காரியிடம் எதையோ பேசப் போனான். கோலவடிவு தன் சித்தப்பா மகள் சந்திராவிடம் எதையோ கேட்கப் போவதுபோல் மேலுதட்டை கீழுதட்டால் ஈரப்படுத்த அவற்றை பிரிக்கப் போனாள்.

அலங்காரி இலைகளை மூடியிருந்த ஈரக் கோனித்துண்டை எடுத்து உதறுவதுபோல் உதறி, அந்த இருவரையும் ஒரங்கட்டிப் பார்த்தாள். அவள் எதையும், எவரையும் சாய்க்கப் போவதுபோல் சாய்த்துப் பார்ப்பவள். காக்கா பார்க்குமே அப்படிப்பட்ட பார்வைக்காரி. இதனால், ஊரில் இவள் இருக்கும்போது, சித்தி என்றும், அக்கா என்றும் உண்மையான அன்போடு அழைப்பவர்கள்கூட, அவள் இல்லாதபோது, காக்காக் கண்ணி என்பார்கள். ஆலமரத்தில் உட்கார்ந்திருக்கும் எந்த காக்காயாவது எச்சம் போடும்போது, இந்த அலங்காளி, "பய காக்காவ பாருங்க" என்பாள். எல்லோரும், காக்காவை ஒப்புக்குப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பாய் சிரிப்பார்கள். அலங்காரிக்கு கண்தான் காக்காக் கண்ணே தவிர, உடம்பு என்னமோ, கருடன் மாதிரி பறக்க முடியும் என்பது போன்ற லேசாய்த் தட்டையான உடம்பு. தடிப்போ ஒல்லியோ இல்லாத பிடிபடாத அழகைச் சுமக்கும் பிடிப்பான உடம்பு. நாற்பது வயதிலும் நளினம் குறையாத தோரணை. அதேசமயம், மனதுக்குள் ஏதோ ஒன்று குடைவது போன்ற முகப் புழுக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/16&oldid=1243300" இலிருந்து மீள்விக்கப்பட்டது