பக்கம்:சாமியாடிகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

171

சாமியாடிகள் 171

எல்லோரும் பார்த்தார்கள். சுடலைமாடன் கோவிலுக்கு மேல் வாணங்கள் ஆகாயச் சுடர்களாய்ப் பறந்தன. சத்தம் போட்டபடியே ஒளியிட்டன. ஒளியிட்டபடியே வளைந்தன. விதவிதமான நிறங்களில் கலர்கலரான வாணங்கள். சுடலைக்கு பூ மாலை சொறிவதுபோல் நட்சத்திரப் பொறிகளாக கீழே விழுந்தன. ஒன்று விழும்போது, இன்னொன்று எழுந்து வானமே வாணமாகியது.

கரும்பட்டையான்கள் சோர்ந்து போனார்கள். 'கால் நாட்டு' விசேஷத்தில் தோற்றாலும் கதாநாயக நாளில் கெலிச்சாகணும். ஏதாவது பெரிசா செய்தாகணும் என்று அருணாசலம் நாட்டு வக்கீலைப் பார்த்துக் கேட்டார்.

"அம்மன் கொடையோட அவங்க வீடியோ படத்த ஏதோ செய்யப் போறதாய் சொன்னியே. என்னடா அது?..."

"இப்போ சொல்லமாட்டேன். ஆனால் செய்வேன்."

"சொல்லேமில பேய்ப்பயலே. இன்னும் மூணு நாள் தான் இருக்கு. அந்தத் தட்டிப்பயலுவ வாணவேடிக்கை காட்டி நம்மள சிறிசாக்கிட்டானுவ... நாமும் பெரிசா செய்யனும் பாரு. சொல்லு. இதுக்கு மேலயும் பவுசு செய்தா நீ எதையுமே செய்யாண்டாம்."

"சொல்லுதேன். ஆனால் இது வெளியில போயிட்டா வீணாயிடும். நான் தென்காசில கொஞ்ச நாளு சினிமா ஆப்பரேட்டரா இருந்தனா."

"ஆமா. அப்புறம். ஏதோ திருடிட்டேன்னு துரத்திட்டாங்கல்லா?"

"நாக்குக்கு எலும்பு இல்லன்னு அதுக்காவ அது எப்படின்னாலும் புரளப்படாது.”

"சரி. தப்புதான். சொல்லுடா..."

"சொல்லுதேன். சொல்லுதேன். அந்தப் பயலுவ டி.வி. பெட்டில சின்னதா சினிமாப்படம் போடுதான். நான் பதினாறு எம்.எம். அதுதான் பாவாடையை பிரிச்சி விரிச்சால் எவ்வளவு பெரிசா இருக்குமோ அவ்வளவு பெரிய திரையில சினிமா காட்டப்போறேன். ஒண்ணுல்ல. ரெண்டு. படம். ரொம்ப பெரிசா தெரியும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/173&oldid=1243701" இலிருந்து மீள்விக்கப்பட்டது