பக்கம்:சாமியாடிகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

185

சாமியாடிகள் 185

தனித்தனியான மண் பிம்பங்கள். சுடலைமாடன் முன்னால் மாடனைச் சித்தரிக்கும் ஒரு படம் இருந்தது. முந்தா நாள் துளசிங்கம் மாடனை நவீனப் படுத்துவதற்காக, தென்காசியில் வாங்கிய படம். இன்றைக்குச் சென்னையில் இருந்து வரும் சினிமா மாஸ்டர்களை வரவேற்கத் தென்காசிக்குப் போயிருக்கும் துளசிங்கம், காளிக்கும் மாடத்திக்கும் போட்டோ படங்கள் வாங்கி வரப்போவதாகச் சொல்லி இருந்தானாம்.

அந்தக் கோவிலுக்குள் இருபத்தோறு தேவதைகள்... சிவபெருமான் தக்கனை அழிப்பதற்காக ஏவிய பூதகணங்கள் என்று வில்லுப்பாட்டாளி வெற்றிக்குமார் ஆடி ஆடிப் பாடுவதைப் பார்க்க அழகாக இருக்கும். இப்போது, சுடலை மாடனின் பங்காளிகளான கோட்டை மாடன், உதிரமாடன், அக்னி மாடன், முத்தாரம்மன், அக்னிபுத்திரன், மயானபுத்திரன், பத்திரகாளி, மாடத்தி, கைக்கொண்டான், பேச்சி முதலிய தேவதைகளின் பிம்பங்களில் தூசி தட்டாமலே வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. கோவிலின் இடைவெளியை இட்டு நிரப்புவதுபோல் பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. வளைவு வளைவான அலங்காரப் பந்தல். கோவிலுக்கு வெளியேயும் பந்தல். அந்தக் கோவில் மதில் சுவருக்கு வெளியே ஒரு சின்ன பிம்பம். ஏதோ ஒரு சாமிப் பெயர். சாமிகளிலும் ஆதிதிராவிட பாகுபாடு உண்டு என்பது மாதிரியான கூரையில்லாத சாமி. மழையில் கரையும் மண்சாமி. அதுக்கு இப்போது தான் பட்டும் படாமலும் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கோவிலுக்கு வெளியே, செம்பட்டையான்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். இடையிடையே வாண வேடிக்கைகள் ஆகாயத்தில் உலாவின. அந்தச் சத்தம் நிற்கும் போதெல்லாம் செம்பட்டையான்கள் பேசிக் கொண்டார்கள்.

"ஏல. சாமியாடி. பயலுவளுக்குச் சொல்லு, கரும்பட்டையான் சாமியாடிக் கிழவனால தோரண மலையில ஏறி சுனையிலே தண்ணி எடுக்க முடியாதுன்னு. அவரு பேரனை ஏற்பாடு பண்ணுறாங்களாம். அதனால நாம உஷாரா இருந்து, அவங்களுக்கு முன்னால மலையிலே ஏறி தண்ணி எடுக்கணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/187&oldid=1243722" இலிருந்து மீள்விக்கப்பட்டது