பக்கம்:சாமியாடிகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

சு. சமுத்திரம்

226 சு. சமுத்திரம்

ஆவணில முடிச்சு வைக்கப் போறேண்டா ஏற்கனவே ஒரு மவளுக்கு, அக்கினி ராசாவோட முடிச்சு போட்டுட்டேண்டா. ஆமாடா. நான்தாண்டா என் மகள் கோலவடிவுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தது. எங்கேடா இருக்கா என் மகள் கோலவடிவு. என் மகளே மகளே. வா மகளே. இந்தத் தாய் ஒன் நெத்தியில குங்குமம் வைக்கணும். என் மகள் கோலம் வரது வரைக்கும் அடிடா மேளம். அடிடா மேளம்."

மேளச்சத்தம் மீண்டும் ஒலித்தது. சாமியாடித் தாத்தா பழனிச்சாமியைப் பார்த்து அருள்பாலிப்பவர் போல் ஒரக்கண்ணால் நோட்டம் போட்டார். எந்தப்பய இனிமேல் என்னை சாமியாடப்படாதுன்னு சொல்லுதான்னு பாத்துப்புடலாம்.

லைலாவையும், அவள் காதலர்களையும் இங்கிருந்தபடியே பார்த்துவிட்டு, இப்போது இருப்புக் கொள்ள முடியாமல், கடலை கோவிலுக்கு போவதற்காகத் தற்செயலாக எழப்போவதுபோல் எழுந்த கரும்பட்டையான் வயதுப் பெண்கள், எழுந்த வேகத்திலேயே உட்கார்ந்தார்கள். கிழட்டுப் பய. கோலவடிவு பேரச் சொல்லிக் கூப்பிட்டது மாதிரி. நம்மளையும் கூப்புடப் போவுது. நாம சபையில இல்லாட்டா வேற எவன் கூடவோ பேசிக்கிட்டு இருக்கதா நெனைப்பாவ. ஆமா. கோலவடிவ எங்க காணோம். விளங்காதவா. வீட்டுக்குள்ள படுத்துக் கிடப்பாள்.

சாமியாடித் தாத்தா உத்தரவு போட்டு, பதினைந்து நிமிடமாயிற்று. கோலவடிவு அவர் முன்னால் தோன்றவில்லை. பாக்கியம் கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு பெண்ணாக உற்றுப் பார்த்தாள். பழனிச்சாமி லேசாக முகத்தைச் சுழித்தார். பிறகு ராமசுப்புவிடம் எதையோ சொன்னார். அவன், அவர் வீட்டைப் பார்த்து நடந்தான். பாக்கியமும் நடந்தாள். சாமியாடித் தாத்தா, மீண்டும் மேளத்தைக் கையாட்டி நிறுத்திவிட்டு மவளே கோல வடிவு. இந்தத் தாயி துடிக்கிற துடிப்பு தெரியலியா. ஒனக்கு குங்குமம் வச்சு அழகு பாக்க ஆசைப்படுகிறாள் இந்த தாயி. வாம்மா.. என் மவளே. வா. அடிடா மேளத்த' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/228&oldid=1243783" இலிருந்து மீள்விக்கப்பட்டது