பக்கம்:சாமியாடிகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

சு. சமுத்திரம்

நடந்தாலும் கரும்பட்டையான் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வழக்கமாக வரும் செம்பட்டையான்களை இப்போது காணவில்லை. கொஞ்ச நஞ்சமிருந்த கரும்பட்டையான்கள் துளசிங்கத்தையும் அலங்காரியையும் துண்டு போட்டு ஏசினார்கள். செம்பட்டையான் மளிகைக் கடைக்கு வழக்கமாய் வரும் கரும்பட்டையான் பெண்கள் இப்போது தலை கவிழ்ந்தபடியே வேறு கடையை நோக்கி நகர்ந்தார்கள். பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவியருக்குக் கல்லெறிச் சம்பவம் பேச்சானது. ஆசிரிய ஆசிரியைகளுக்கு அது ஒரு பொருட்டல்ல. கோலவடிவே சிலபஸ்... துளசிங்கமே பாடம், புஷ்பமே பரீட்சை.

இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு, பஸ்ரோடு பக்கமாக வந்தால் அந்தச் சாலைக்கு மேற்கே உள்ள ஆசாரிமார் குடியில், பெண்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அலசினார்கள். கல்வீச்சு இந்தப் பக்கம் வரவில்லை. வரவும் முடியாது... ஆனாலும் மாட்டுக்கு லாடம் கட்டிய கொல்லாசாரி கலப்பையைத் தண்டிப்பது போலவும் தட்டிக் கொடுப்பது போலவும் அல்லாடிய தச்சாசாரியிடம் பேச்சுக் கொடுத்தார். திருமலை புஷ்பத்த ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிட்டானாமே. இதைத் தாண்டினால் காரைவீட்டார் பகுதி... இங்கே நம்ம குடும்பந்தான் நல்ல குடும்பம்...' என்பது மாதிரியான பேச்சுக்கள்.

இப்படி ஊர் எல்லாப் பக்கமும் ஏதோ ஒருவகையில் ஒரு விவகாரத்தையே பல்நோக்காய் பேசினாலும் துளசிங்கம் கடை இருக்கும் பகுதியில்தான் சத்தம், பலத்த கத்தலாகியது... இதற்கு அருகே உள்ள காத்துக்கருப்பன் குடியிருப்புப் பகுதியில் ரோட்டுப் பக்கமான மைதானத்தில், ஒரே கூட்டம் பற்குணமும், பீடி ஏசெண்டும் துள்ளிக் குதித்தார்கள். சொக்காரர்கள்... ஆங்காங்கே இடைச் செறுகல் போட்டார்கள்.

"கடைசில... காத்திருந்தவன் பெண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டு போனவன் கதையாப் போயிட்டே..."

"அப்படிப் பாத்தா காத்து இருந்தவன் துளசிங்கம்ட. நேத்து வந்தவன்தான் அக்னிராசா... பழமொழி தலைகீழாயிட்டு...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/256&oldid=1244090" இலிருந்து மீள்விக்கப்பட்டது