பக்கம்:சாமியாடிகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

சு. சமுத்திரம்

32

கோலவடிவு முடங்கிக் கிடந்தாள்.

அந்தப் பழைய காலத்துத் தேக்குக் கட்டிலில் புதிய கால சகுந்தலையாக குப்புறக் கிடந்தாள். முகத்தைப் பக்கவாட்டில் வைத்தால் எதையும் பார்க்க வேண்டியதிருக்கும் என்பதுபோல், நெற்றி, கட்டில் மேட்டில் படும்படி கிடந்தாள். பச்சைக் கீரை போல் முதுகில் படர்ந்த அவள் முடி, அந்த ஆடிக்காற்றில் அவள் உணர்வுகளைப் போல் தனித்தனியாக அல்லாடியது. பிடரியிலும் தோளிலும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தது. கண்களை மூடி அவற்றையும் கைகளால் மறைத்துச் செத்தவள் போல் கிடந்தாள்.

அவளை ஒரு பொருட்டாகக் கருதாமல் அலங்காரியும் துளசிங்கமும் போனபோது, தன்னை ஒரேடியடியாக விட்டு விட்டுப் போகிறார்களோ என்ற பயத்தில் அவர்கள் பின்னால் ஓடப்போனாள். பிறகு சொந்த ஊரில் பட்ட அசிங்கத்தை இந்த ஊர் தெருவிலும் பட வேண்டாம் என்று நினைத்து அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தாள். திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்து முன் கைகளில் முகம் ஊன்றி, கைகள் வழியாக கண்ணிர் விட்டாள். அவளையே பகவதி பாட்டி பார்த்துக் கொண்டு நின்றாள். இமைகளுக்குள் சிறைப்பட்ட கண்கள் கொட்ட கொட்டப் பார்த்தாள். அந்த பார்வை தாளமாட்டாது கோலவடிவு புறக்கடைக்குப் போனாள். அங்கே நின்ற முருங்கை மரத்தில் சாய்ந்தாள். ரயில் பெட்டிகள் மாதிரியான கம்பளிப் பூச்சிகள் அவள் உடம்பில் ஊர்ந்தன. அவளுக்கு உணர்வேதும் இல்லை. முகத்தை மரத்திலே இடித்து இடித்து நெற்றிப் பொட்டில் தனக்குத்தானே குங்குமம் வைத்துக் கொண்டாள். உடம்புக்குள் நெருப்புப் பற்றி எரிந்தது. முதுகுப் பகுதி அனலாய்க் கொதித்தது. இருதயம் சுடலைமாடன் கோயில் மேளம் போல் அடித்துக் கொண்டது. கண்கள் நெருப்பாய் எரிந்தன. காதுக்குள் பயங்கர இரைச்சல். கண்ணைத் திறக்க முடியவில்லை. தலையைச் சுமக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/270&oldid=1243856" இலிருந்து மீள்விக்கப்பட்டது