பக்கம்:சாமியாடிகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

சு. சமுத்திரம்

282 சு. சமுத்திரம்

காலையும், கழுத்தையும் மூக்கால் நுகர்ந்து, வாயால் கெளவப் போனபோது, கோலவடிவு நிமிர்ந்து உட்கார்ந்தாள். உடனே அந்த நாய்கள் குலைத்தன. அவளைச் சமாளிக்க இன்னும் சில தேவை என்பதுபோல், இதர நாய்களைக் கூப்பிடும் குரலில் கத்தின. காதல் வயப்பட்டு, ஒப்பாரி போடுவதுபோல், ஊளையிட்ட நாய்களும், இப்போது போர்ப்பரணி பாடின. அவள் எழுந்தபோது, லேசாய் பயந்து, அவளைச் சுற்றி வியூகம் போட்டு நோட்டம் பார்த்தன.

கோலவடிவு, அதைப் பொருட்படுத்தாததுபோல் நின்றாள். அங்கே உள்ள, சின்னப் பாட்டி மகன் சிவனுப்பாண்டி சித்தப்பா வீட்டிற்குப் போகலாம் என்று யோசிப்பதுபோல், பிடறியில் கை கோர்த்தபடி, அந்த வீட்டையே பார்த்தாள். பிறகு ஒடிப் போனவளுக்கு, உறவும் ஒடிப்போகும் என்று நினைப்பதுபோல், நடக்கத் துவங்கினாள். அந்த நாய் வட்டம், அவள் நடை வேகத்திற்குப் பயந்து விட்டுக் கொடுத்தது. பெரும்பாலான நாய்கள், அவளுக்குப் பயந்தது போல், வால்களை பின்னங் கால்களில் நுழைத்துக் கொண்டு, வட்டத்தை வழிகளாய்க் காட்டின.

கோலவடிவோ, அந்த மையிருட்டில் தாறுமாறாய் நடந்தாள். எருக்குழியைத் தாண்டி, ஊரின் கொல்லைப் புறமாக பனங்காட்டு வழியாக பாய்ந்தாள். அது வெட்டாம்பட்டிக்கும் சட்டாம்பட்டிக்கும் இடையே உள்ள குறுக்குவழி. சைக்கிள்கூட செல்ல முடியாத பாதை. பனைமரத்து ஒலைகள், பேய்க்காற்றில், ஒன்றுடன் ஒன்று உரசி ஊளையிட்டன. எங்கோ ஒடிய முயல், அவளைப் பார்த்து பம்மியது. ஏதோ ஒரு. பாம்புக்கு குறி வைத்த கீரி, அதை விட்டுவிட்டு, அவளை எதிர்த்து நின்றது. அவள், அது புரியாமல், அதன்மேல் கால் வைக்கப் போனபோது, அந்தக் கீரி, எந்த பிராணியோ இளைப்பாறும் குழிக்குள் பாய்ந்தது.

மரணம் என்ற உருவமற்ற ஒன்று, பனங்காடே தலையாக, சவுக்குத் தோப்பே உடலாக, பாழுங் கிணறுகளே பாதங்களாக உருவம் பெற்றதுபோல் பேய்ச்சத்தமாக காற்று மூச்சை வேக வேகமாய் விட்டுக் கொண்டிருந்தது. காற்றில் விழுந்த பனங்காய்கள், ஏற்கெனவே விழுந்த புளியங்காய்களை நசுக்கின. எங்கோ ஒரு அவலச் சத்தம். எதிலோ ஒரு ஊளைச்சத்தம். அனைத்திலும். ஒரு ஆவேசச் சத்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/284&oldid=1244099" இலிருந்து மீள்விக்கப்பட்டது