பக்கம்:சாமியாடிகள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

283

சாமியாடிகள் 283

கோலவடிவு பனங்காட்டைத் தாண்டி சவுக்குத் தோப்புக்குள் நடந்தாள். நடக்கும் இடமெல்லாம் இடறல்கள். நோக்கும் திசையெல்லாம் பேயிருட்டு. சப். சப். என்று வளைவிலும், நெளிவிலும் நர்த்தனம் ஆடும் சவுக்கு மரங்கள். அவளை சில நரிகள் வழி மறிக்கப் பார்த்தன. அவளும், அவை தன்னை அடித்துத் திங்கட்டும் என்பதுபோல் நின்ற இடத்திலேயே நின்றாள். ஆனால் அந்த நரிகளோ, அவள் தங்களை அடித்துத் தின்னாம்ல் இருந்தால் போதும் என்பதுபோல் திரும்பி பாராமல் ஓடின.

கோலவடிவு, சவுக்குத் தோப்பைத் தாண்டி, வயல்வெளிப் பக்கம் வந்தாள். பகலில் பொன் நிறத்தில் மின்னும் நெற்பயிர்கள், இருட்டுக் கற்றைகளாய் அவள் மேல் பட்டுத் தொட்டன. தென்னைகள், இருளின் கோடுகளாய் தென்பட்டன. அவள் நடை போட்டாள். தாண்டவமாடுபவள் போல், தாவிக் குதித்தாள். தொலைவில், சுடலைமாடன் கோவில் பக்கம், வாணங்கள், ஆகாயத்தில் பாளம் பாளமாய் பாய்ந்து அந்தக் கோவிலை அடையாளப்படுத்தின. இருள் கிழிந்த வாணங்கள், இறுதியில் இருளில் கிழிபட்டு, அற்றுப் போயின. அவளை போகாதே போகாதே என்பதுபோல், பூசணிக் கொடிகள் அவள் கால்களைப் பின்னின. ஆமணக்குச் செடிகள் வழிமறித்தன. வெட்டப்பட்ட சோளக் கட்டைகள் தட்டின. அவளோ கொடியைக் கிழித்து, செடியை ஒடித்து, கட்டைகளை கட்டையாக்கி நடந்தாள். கடந்த காலம், நிகழ்கால களங்கமாக, எதிர்காலம், எதிரிக் காலமாக. அவள், காலங் கடந்தவளாய், காலத்தால் கடத்தப்பட்டவளாய் நடந்தாள்.

ஏதோ ஒரு விரக்தியோ அல்லது சக்தியோ அவளை நடத்திக் கொண்டிருந்தது. துணிந்தவளுக்கு துக்கமில்லை. வெட்கமில்லை என்பது மாதிரியான அசட்டு நடை. துளசிங்கத்தால் கீழே விழுந்தபோது வருத்தப்பட்டு, தனது தங்கையை தன்னுடன் ஒப்பிட்டு பேசியபோது கோபப்பட்டு, அவன் போலீஸ் நிலையம் நோக்கி போனபோது பாவப்பட்டு, கட்டிலோடு கட்டிலாய் கிடந்தவள், இப்படி நடக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/285&oldid=1244102" இலிருந்து மீள்விக்கப்பட்டது