பக்கம்:சாமியாடிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

27

சாமியாடிகள் 27

"என்ன நடந்ததுன்னு சொல்லுழா. ஏமுழா. பயப்படுறே. நான் இருக்கும்போது, நீ எதற்குப் பயப்படனும். சும்மாச் சொல்லு."

சந்திரா இப்போது தனக்குப் பயமில்லை என்பதை நிரூபிப் பதற்காகவே சொல்லப் போனாள். இதற்குள் அலங்காரி, முந்திக் கொண்டு பேசினாள்.

"மம்பெட்டிய கீழே போட்டுட்டு உட்காறேன் மணி. வயலுக்கு காலயிலயே போயிட்டியோ..."

"எமுழா சந்திரா. சொல்லேமுழா."

“நானே சொல்லுதேன் ராசா. எங்க மச்சான் மவன் துளசிங்கம், அவனைத்தான் ஒனக்குத் தெரியுமே. சினிமா கிறுக்கன்னு. ஏதோ ஒரு சினிமாப்படம் எடுக்கப் போறதைச் சொன்னான். உடனே நான். இந்த அத்ததான். நம்ம கோலவடிவு கதாநாயகியாய் நடிக்கனுமுன்னு சொன்னேன். ஒன் தங்கச்சி எனக்கு மருமவள் முறையாச்சே என்கிற உரிமையில சொல்லிப் புட்டேன். அப்படிச் சொன்னது அத்தைக்கு இப்போகூட தப்பாத் தெரியல. தப்புன்னா தப்புன்னு சொல்லு. இனிமேல் சொல்ல மாட்டேன். நேத்து ஒங்க வீட்டுக்கு நாலைஞ்சு வெள்ளச் சட்டைக் காரங்க வந்திருக்காங்களே. யாரு ராசா அவங்க. பழனிச்சாமி அண்ணாச்சிய விலக்குத் தீர்த்து விவகாரம் பேச கூப்புட்டாங்களா. ஒங்கப்பா வழக்காளியா இருக்கதுல இந்த ஊரே பெருமப்படுது ராசா. உட்காறேன்."

சந்திராவால் பொறுக்க முடியவில்லை. முட்டாளாகிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. சுய மரியாதைக்கு வில்லங்கம் ஏற்பட்டிருப்பது போன்ற அவமானம். அண்ணனிடம் கோபங் கோபமாய்ப் பேசத் துவங்கி, பிறகு அந்தப் பேச்சை அழுதழுது முடித்தாள்.

"நம்பாத அண்ணா. நம்பாத அலங்காரி அத்த மழுப்புறாள். சரி அவதான் புத்தியக் காட்டிட்டான்னா இந்த, துளசிங்கம் என்ன சொன்னான் தெரியுமா? நம்ம கோலவடிவு தமிழுக்கு தமிழ் கதாநாயகியாயும், இந்திக்கு இந்திக் கதாநாயகியாயும் இருக்காளாம். நான் தட்டிக் கேட்ட பிறகும் திமுறுல சொல்றான் அண்ணா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/29&oldid=1243304" இலிருந்து மீள்விக்கப்பட்டது