பக்கம்:சாமியாடிகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

சு. சமுத்திரம்

300 சு. சமுத்திரம்

தலைமுடியை தேடிப் பிடித்து, முன்னால் கொண்டு வந்து, பச்சை கீரைப்போல், படர்ந்திருந்த அந்த தலை முடியைக் கயிறு மாதிரி திருகிவிட்டு, அதன் முனையை பிடித்தபடியே இழுத்தார். இழுத்தபடியே நடந்தார். நடந்தபடியே கத்தினார்.

“எத்தனைபேர் கிட்ட போனியோ. இவன் எத்தனாவது ஆளோ. இங்க எப்படிழா வரலாம்?"

செம்பட்டையான்கள் சிலருக்கு மனம் கேட்கவில்லை.

"எப்பா. பெண்பாவம் பொல்லாதுப்பா. ஒன் மவன நம்பி வந்த ஜீவன். அவன் விட்டாலும் நாம விடப் படாதுப்பா. ஒன் மவளுக்கும் இப்படி ஒரு நெலம வந்தால், என்னப்பா செய்வே. பாவம் இருந்துட்டுப் போட்டும்."

எலி டாக்டர் யோசிப்பதுபோல் நின்றபோது, அவரது புலிப் பொண்டாட்டி உறுமல் குரலோடு பெரிய வீட்டிற்குள் இருந்து வந்து, சொன்னவர்களைப் பார்த்து சூடாகக் கேட்டாள்.

"ஓங்க மவளுவ இவள மாதிரி பண்ணுவாளுவ ஆனால், என் மகள் பண்ணமாட்டாள். அப்படிப் பண்ணுனால் அவளை எருக்குழிலே நானே வெட்டிப் புதைப்பேன். இவளை எப்படிச் சேக்க முடியும்? எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பாராத என் மவன மயக்குனாள். அவனும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அவளைக் கூட்டிட்டுப் போனான். கோயில் கொடைக்கு கூட்டிவரப் போனான். இவதான், அங்க இருந்து எங்கேயோ ஒடிப்போயிட்டு, இப்போ வந்து நிக்காள். என் மகனை விட்டுட்டுப் போனவளை சேத்தால், பழையபடியும் போகமாட்டாள்னு என்ன நிச்சயம்..? விளையும் பயிரு முளையிலே தெரியும். இது, மூணு இல விடுமுன்னாலேயே நாலு முந்தானை விரிச்ச வம்சம். இதோ பாரும். இன்னுமா பார்த்துக்கிட்டு நிக்கியரு. பாவி மனுஷா ஒம்மத்தான்."

புருஷன்கார எலி டாக்டர், கோலவடிவின் பிடித்த முடியை, இறுக்கினார். சுருட்டுச் சுருட்டாய் சுருட்டி, அதன் இடைவெளியைக் குறைத்தார். அவளை, வெட்டுப்படப் போகும் ஆட்டை இழுப்பதுபோல, இழுத்துக் கொண்டு போனார். கல்லெல்லாம் அவள் காலில் மோதின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/302&oldid=1244165" இலிருந்து மீள்விக்கப்பட்டது