பக்கம்:சாமியாடிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சு. சமுத்திரம்

பிறந்து கொல்லும் நோய் மாதிரி, அவள் அம்மா, ஒரு பணக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். முப்பது வயது வித்தியாசம். மனைவியை அடிதடி மூலம் மட்டுமே ஆண்மையை நிரூபிக்க நினைத்தவர் கிழட்டு அப்பா. ஆண்மைக் குறைவாலும், வயது முதிர்ச்சியாலும் இளம் மனைவியைச் சந்தேகப்பட்டவர். கெட்ட பேர் வாங்குறதே வாங்குறோம். கெட்டுப்போயே வாங்குவோம் என்று திடப்பட்ட தாய்க்காரி, அவளுக்கும் அவளது ஆசை நாயகர்களுக்கும், பெற்ற மகளான தானே காவல் காக்க வேண்டிய கொடுமை.

இத்தகைய சம்போவ சம்பவங்களைக் காணும்போதும், அம்மா தன்மீது பாயும் போதும், ஏதாவது ஒரு இடத்தில் ஒளிந்து பிடி குடித்த அனுபவங்கள். அப்பன்காரனே ஒரு நாள் அவளைக் கையும் களவுமாய்ப் பிடித்து, தெருவுக்கு இழுத்து வந்து, அவளை உதை உதை என்று உதைத்து, அவள் துண்டுப் பீடியை ஊராருக்குக் காட்டி, அவள் மனசைத் துண்டு போட்ட சிறுமை. பீடியை விட்டவளுக்கு, அம்மாவின் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போதும், அப்பாவின் கொடுமையான செயல்களின்போதும், யாரோ தன் தலையை வருடிக் கொடுப்பது போன்ற கற்பனை. எவனோ ஒருத்தன் தன்னை மடியில் போட்டு, உச்சிமோந்து, தட்டிக் கொடுத்து, ஆதரவு கொடுப்பது போன்ற அறியாப் பருவத்தின் புரியாத சிந்தனைகள்.

கோபம் வரும்போதோ... வருத்தம் வரும்போதோ பீடி பிடிப்பதுபோல், மதுபானம் அருந்துவதுபோல், இவளுக்கு அத்தகைய சந்தர்ப்பங்களில் பாலுணர்வுக் கற்பனையே ஒரு போதை ஆகிவிட்டது. அம்மா, கன்னத்தைக் கிள்ளிய வலியிலும், உறவுப் பிணியில் துடிக்கும்போதும், எவனோ ஒருத்தன் - ஒரு ராஜபுத்திரன் அவள் கன்னத்தை வருடிக் கொடுப்பது போன்ற எண்ணம். இப்படி மூச்சு விடுவது எப்படி இயல்போ, அப்படி எவனோ ஒருத்தன் அவளுக்குச் செய்கிற கற்பனைக் காதல் சிகிச்சை இயல்பாகிவிட்டது. புகை பிடிப்பவனுக்கு இன்ன சிகரெட் என்று இருக்கலாம். இவளுக்கோ இன்னவன் என்று இல்லை. ஒரு கொடுமையான அனுபவத்திற்கு முன்னால் எந்த வாலிபனைப் பார்த்திருப்பாளோ அவனே, அவளது சேவகன். அவனே அவளது ராஜபுத்திரன். இப்படிப்பட்ட விபரீதக் கற்பனையால், பலரிடம் சிக்கிய பிறகு, எவனையும் சிக்க வைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/54&oldid=1388264" இலிருந்து மீள்விக்கப்பட்டது