பக்கம்:சாமியாடிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சு. சமுத்திரம்

நிசமுன்னு ஒரு வார்த்த சொல்லிட்டு அப்டியே ஓடு... ஒனக்கும் நேரமாகுது பாரு..."

"ரொம்பவும் பிகு பண்ணாத... கோலம்... சித்தி சொல்லுறது நிசமான்னு சொல்லு... அடடே ஏன் இப்டி வெட்கப்படுற... சரி என்னை நேருக்கு நேராய் பாரு... நானே ஒன் முகத்துல இருந்து தெரிஞ்சுக்கிறேன்."

கோலவடிவு, கண்களைக் கீழே போட்டு மேலே நிமிர்த்தினாள். துளசிங்கம் அரைவட்டமாகத் தோன்றினான்... உடனே துளசிங்கம், "சொல்லு. சொல்லு." என்றான். அப்படியும் அவள் திரும்பவில்லை. உடனே சலிப்போடு, "சரி... நீ சொல்லவும் வேண்டாம்... நான் கேக்கவும் வேண்டாம்... நான் வாறேன் சித்தி... இப்போ உரமூட்டை வார நேரம்" என்றான்.

கோலவடிவு அவன் போய்விடக்கூடாதே என்பது போல், தலையை நிமித்தினாள். அவனை நேருக்கு நேராய் பார்த்துவிட்டு முகத்தை இரு கைகளினாலும் மூடி, மறைத்துக் கொண்டாள். பிறகு விரல்களை அகலமாக்கி அவற்றின் இடைவெளிக்கு இடையே அவனைப் பார்த்தாள். இலைதழை மாதிரியான சட்டை... ராணுவ வீரர்கள் போடுவது மாதிரி... இரண்டு பைகள்... தோள்பட்டையில் இருந்து மார்வு வரைக்கும் பச்சை நிறப் பட்டை... தங்க நிறத்திலான பித்தான்கள்... இறுக்கமான பேண்ட்... சிமெண்ட் கலர் பளபளக்கும் பெல்ட்... கண்ணைக் கூச வைக்கும் கடிகாரம்...

அலங்காரி உற்சாகப்படுத்தினாள்.

"ஒன் மச்சான் கிட்டே சொல்லேன்... கோலம், இல்லாட்டி என்னை பொய் சொல்லியா நெனச்சுடப் போறான்."

கோலவடிவு அத்தையைப் பார்ப்பதுபோல், அவளது மச்சான் மகனைப் பார்த்தாள். பிறகு குழந்தைகள் எழுத்துக்கூட்டி ஒப்பிப்பது போல் ஒப்பித்தாள்.

"அ...த்...தை... நி...ச....ம்..."

"அத்தை நிசம்தான். ஆனால் அவங்க பேசுவது...."

"நி...ச....ம்...."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/62&oldid=1243489" இலிருந்து மீள்விக்கப்பட்டது