பக்கம்:சாமியாடிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சு. சமுத்திரம்

74 சு. சமுத்திரம்

அலங்காரி காஞ்சானின் கையைப் பிடித்து இழுத்து, கதவருகே கொண்டு வந்து, கதவைத் திறந்தாள். தெருவுக்கு வந்த காஞ்சான் ஏமாற்றத்தை ஆவேசமாக மாற்றிக் கொண்டு நடை போட்டார்.

6

'குளத்தடி வயல், வசதியுள்ள குடும்பத்தின் மூத்த குழந்தை மாதிரி, குளத்தின் பெரிய வாய்க்காலில் உருண்டோடும் நீரைக் கிளை வாய்க்கால் மூலம் உள்வாங்கி செழித்துக் கொழித்த நிலம் அந்த குளத்தின் முக்கிய கால்வாயின் தண்ணிர் முதலில் இந்த வயலில் பாய்ந்தாக வேண்டிய இடத்தில் உள்ள இடம். தங்க விதைகளை விதைத்ததுபோல் நெற்பயிர்கள் கதிர் சூல்களோடு பொன்மயமாய் மின்னி, தள்ளாடித் தள்ளாடி ஆடின. அந்த கர்ப்பிணிப் பெண்களுக்குத் தென்னை மரங்கள் காவல் காத்தன. ஆமணக்குச் செடிகள் சாமரம் வீசின.

வயல் ஒரமாய் உள்ள கிணற்றில் பம்ப் செட்டில் இருந்து தண்ணீர் பாளம் பாளமாய்ப் பாய்ந்தது, ஒளி வெள்ளம் போன்ற முழுவீச்சு குட்டி அருவி ஒன்று கொட்டிக் கொட்டிக் கமலைக் கிடங்கைக் கடலாக்கிக் கொண்டிருந்தது. சேலை, பாவாடைகளைத் துவைத்து முடித்துச் சரல் மேட்டில் உலர்த்திவிட்டு, முகமெங்கும் மஞ்சளும், உடலெங்கும் சோப்புமாய் நின்ற கோலவடிவு, பின்னலை அவிழ்த்துப் பின்புறமாய்க் கையைக் கொண்டு போய்த் தலைமுடியை தட்டிவிட்டு, தகரக்குழாய் வழியாகப் பாய்ந்த தண்ணிருக்குள் தலையைக் கொடுத்தாள். அப்படியே மல்லாந்து கிணத்துச் சுவரில் சாய்ந்தபடி கால்களை நீட்டி, கைகளைப் பரப்பி மேலே இருந்து கொட்டிய நீரைச் சிணுங்கிச் சிணுங்கி அதைக் கடிப்பது போல் கடித்து, வாய்க்குள் வந்த நீரைச் செல்லஞ் செல்லமாய்க் கொப்பளித்து, கடலலை போல், வேக வேகமாய்ப் பாய்ந்த நீர், தன் மேனியில் பட்டு, பூப்பூவாய்ச் சிதறுவதை ரசித்தபடியே குளித்துக் கொண்டிருந்தபோது -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/76&oldid=1243506" இலிருந்து மீள்விக்கப்பட்டது