பக்கம்:சாமியாடிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிராமமே சாமியாடுகிறது....

'பீடம் தெரியாமல் சாமி ஆடுகிறான்' என்பது அன்றைய கிராமத்துப் பழமொழி. அதாவது ஒருத்தர், தனது செயலைப் பற்றியோ அதன் பின் விளைவுகளைப் பற்றியோ புரியாத பேதை என்கிற பொருளில் இந்தப் பழமொழி வந்திருக்கவேண்டும். இது முன்பு பொருந்தியதோ இல்லையோ, இப்போது பொருந்துகிறது.

இந்த நாவலின் தலைப்பிற்கேற்ப நவீன கலாச்சார ஊடுறுவலால் கோவில்களில் மட்டும் இப்போது சாமியாட்டம் நடைபெறவில்லை. கிராமமே சாமி ஆடுகிறது. ஆமை புகுந்த வீடு போலான தொலைக்காட்சி வரவழைப்பு எங்கே கொண்டு போகும் என்பது புரியாமலே எல்லோருமே பீடம் தெரியாமல் சாமி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். வேப்பிலை அடிக்கத்தான் ஆளில்லை.

இந்த நாவலில், சாதிச் சண்டைகள் சித்தரிக்கப்படவில்லை. ஆனாலும், இதில் வரும் பங்காளிக் கூட்டங்களின் மோதல்களும் இவற்றைப் போன்றதே. ஆக, கலவரத்திற்கு சாதி மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை. இந்த நாவல் சொல்லாமல் சொல்கிறது.

நல்ல நூல்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்றான திருவரசு புத்தக நிலையம், இந்த நாவலை புதுப்பித்து வெளியிடுவது இந்தப் படைப்பிற்கும் எனக்கும் கிடைத்த ஒரு இலக்கியக் கெளரவம்.

சு. சமுத்திரம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/8&oldid=1243665" இலிருந்து மீள்விக்கப்பட்டது