பக்கம்:சாமியாடிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





8

சட்டாம்பட்டியின் முகப்பில் உள்ள முருகன் கோவில், ஊருக்கு வருகிறவர்களும், போகிறவர்களும் இந்தக் கோவிலைப் பார்க்காமல் போக முடியாது. அவ்வளவு கம்பீரமான கோவில். கோபுரக் கோவிலாக இல்லையென்றாலும், அழகு, கம்பீரம், வீரம், நளினம் கொண்ட கலவையில் தோய்ந்தெடுத்தது போன்ற முருகன்சிலை. கையில் தண்டத்தோடு தனித்திருக்கும் முருகன். தனிச்சிலை. அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலமாகக் கூறப்படுவதுண்டு. இந்தக் கோவிலுக்கு எல்லோரும் வருவார்கள் என்றாலும், இதன் பராமரிப்பு சட்டாம்பட்டி சைவப் பிள்ளைகளின் பொறுப்பில்தான் உள்ளது, சில மாதங்களாக கோவிலை ஊரே எடுத்துக் கொள்ள வேண்டும் - என்று பேச்சு. அப்போதானே கோயில் நிலத்த ஊர்ப் பெரிய மனிதர்களும் அமுக்கலாம். பெரிய மனிதர்கள் சூட்சகமாகக் சொன்னதை, சின்ன மனிதர்கள் இப்போது ஊரெங்கும் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

ரஞ்சிதம் கோவிலுக்குள் மயில் சிலைக்கு அப்பால் உள்ள கல் தூணில் சாய்ந்தபடியே அந்த ஆண்டிச் சிலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு தட்டு. அதே பீடித்தட்டு. ஆனால் இப்போது பீடிகளோ, இலைகளோ இல்லை. முல்லைப்பூ மாலை. சுருள் சுருளாய்ப் பாம்புபோல் மடித்து வைக்கப்பட்டிருந்தது. கதம்பம் கண்ணுக்கினிய தோற்றத்துடன் முல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தது. சிவப்பு, வெள்ளை ரோஜாக்கள் தனித்தனியாகத் தட்டிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தட்டின் எஞ்சிய பகுதியில், முருவு மருக்கொழுந்து, எலுமிச்சம் பழங்கள். இன்னொரு சின்னத் தட்டில் ஜரிகைக் காகிதக் கற்பூரத் துண்டுகள். ஊதுபத்திகள். இப்போதைக்கு அந்தப் பூ விற்பனைக்கு அவள் ஒருத்திதான் ஏகபோக முதலாளி. தொழிலாளிகளாய்ப் போராட்டம் துவங்கி, முதலாளியாய்' முடிந்து போனவள். திருமலை அவளைப் பார்த்து திடுக்கிட்டுக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/97&oldid=1243537" இலிருந்து மீள்விக்கப்பட்டது