பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சாயங்கால மேகங்கள்

யிருந்தது. அவனிடம் கற்றுக் கொண்டவர்களுக்கு முதலில் வன்முறைக்கும், தற்காப்புக்கும் உள்ள வேறுபாட்டை அவன் விளக்கிக் கூற வேண்டியிருந்தது. இரண்டும் ஒன்று என்றே அவர்களில் பலர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

இரத்தத் திமிரைக் காட்டுவதற்காக உடன்வலிமையைப் பயன்படுத்துவது வன்முறை. நியாம்மான காரணத்துக்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது தற்காப்பு தற்காப்பையும் வன்முறையையும் இனம் பிரித்துப் புரிந்து கொள்கிற அளவு கூட பலருக்குச் சிந்தனை வளர்ந்திருக்கவில்லை என்பது அவர்களிடம் பேசியபோது அவனுக்குப் புரிந்தது. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் போலப் பாரதியாரையும் திரு.வி.க.வைப் பற்றியும் உரையாடி விவாதிக்க முடிந்த அறிவுத் தரமுள்ள நண்பர்களோடு பழகும் போதும், மற்றவர்களிடம் பழகும் போதுதான் இரண்டு விதமான எல்லைகளில் நின்று பழக வேண்டியிருப்பதைப் பூமி உணர்ந்திருந்தான். வன்முறைக்கும், தற்காப்புக்கும் உள்ள வேறுபாட்டை சக டிரைவர்களுக்கு விளக்கும் போதும் அந்த நிலையைப் பூமி தெரிந்து கொண்டே அதற்கு ஏற்ப அவர்களிடம் பேச வேண்டி யிருந்தது.

பசு மாட்டுக்குக் கொம்பு இருக்கிறது. அது பெரும்பாலும் அதைத் தற்காப்புக்குப் பயன்படுத்துகிறதே ஒழியத் தன் வலிமையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதேயில்லை. தற்காப்புக்கும் வன்முறைக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறியும் திறனே இல்லாத மிருகங்களுக்குக் கூடப் புரிந்திருக்கிறார் போலத் தெரிகிறது. ஆனால் பகுத்தறிவுள்ளவர்களாகச் சொல்லிக் கொள்ளும் மனிதர்களுக்குத்தான் அது புரியவில்லை. உறைக்கவில்லை.

இங்கு வன்முறையை வலிமை என்று நினைக்கிறார்கள். தன்னடக்கத்தைக் கையாலாகாத்தனம் என்று நினைக்கிறார்கள். கையாலாகாதனத்தைத் தன்னடக்கம் என்று நினைக்கிறார்கள், ஆணவத்தைத் தன்மானம் என்றும் தன்மானத்தை