பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

சாயங்கால மேகங்கள்

முந்தவோ ஓவர்டேக் செய்யவோ அவர்கள் முயலவில்லை. ஒரு சீராகப் பூமியின் டாக்ஸியைப் பின்பற்றினர். தான் எங்கே இறங்குகிறோம் என்பதைப் பார்க்கவே அவர்கள் பின்தொடர்வதாகப் பூமிக்குத் தோன்றியது. அவர்களை மேலும் குழப்பமடையச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் லஸ்ஸில் இறங்காமல் கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் முன்னால் போய் நிற்குமாறு டாக்ஸி டிரைவரிடம் சொன்னான் பூமி. போலீஸ் ஸ்டேஷன் என்றதும் டாக்ஸி - டிரைவர் கொஞ்சம் பதற்றம் அடைவது புரிந்தது.

ஆள்கட்டும் பணவசதியும் இருந்தால் அரசியல் என்ற ஒரு போர்வையையும் போர்த்திக்கொண்டு எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய முடிகிறது. மன்னாரு இதற்குப் பிரத்தியட்சமான உதாரணமாயிருந்தான். முதல் இல்லாமல் முதலீடும் இல்லாமல் மன்னாரு கோடிக் கணக்கில் பணம் புரட்டினான். அவனுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பயந்தன. அவன் ஆட்சிக்கு வருகிற கட்சிகளின் அடியாளாகவும், பண உதவியாளனாகவும் மாறினான். அவனைச் சீண்டுகிற யாரும் தப்ப முடியாத நிலைமையை அவனது அரசியல் செல்வாக்கு அவனுக்கு அளித்திருந்தது. அவனும் அவனுடைய ‘அண்டர் வோர்ல்ட்’ நடவடிக்கைகளும் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தேவைப்பட்டன.

பூமி மன்னாருவின் வலிமையைக் குறைத்து மதிப்பிடவில்லை. பழைய காந்திகால அரசியலில் மக்களுக்காகத் தியாகம் செய்பவர்கள்தான் தலைவர்களாக இருந்தார்கள். இன்றைய மன்னாருவின் அரசியலில் மக்களைத் தியாகம் செய்ய வைத்துத் தாங்கள் வசதிகளை அனுபவிப்பவர்கள் தான் தலைவர்களாகி இருந்தார்கள். இந்த வித்தியாசம் பூமிக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது.

மன்னாருவை எதிர்க்கத் துணியும்போதே எதை எதை எதிர்க்க வேண்டியிருக்கும், எங்கெங்கிருந்து எல்லாம் சிரமங்கள் தன்னைத் தேடிவரும் என்பதை எல்லாம் அவன் அது