பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

271

சித்ரா அவன் விருப்பத்தை மறுத்துச் சொல்லவில்லை. கடற்கரையிலிருந்து திரும்புமுன் பூமி தன் எதிர்காலத் திட்டங்களை அவளிடம் விவரித்தான். இன்னொருவனிடம் லீஸுக்கு விட்டிருந்த தன் ஆட்டோவை இனிமேல் தானே எடுத்து ஓட்டப் போவதாகவும், இரவு நேரங்களில் மாணவர்களுக்குக் கராத்தே கற்றுக் கொடுக்கும் பணியையும் தொடர்ந்து செய்யப்போவதாகவும் அவளிடம் விவரித்துக் கூறினான். அவளை ஒரு கேள்வியும் கேட்டான்:

“அபாயங்களும் போராட்டங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த என் வாழ்வில் நீ தொடர்ந்து துணையாக வரச் சம்மதிக்கிறாயோ, இல்லையோ, ஆனால் அதற்காக உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்.”

“ஏற்கனவே உங்களோடு வந்து விட்டவளைப் புதிதாக ‘வருகிறாயா?’ என்று கேட்பது என்பது என்ன நியாயம்?”

“மகிழ்ச்சி! நன்றி” என்று பூமி புன்முறுவலோடு அவளுக்கு மறுமொழி கூறினான். மேலும் சொன்னான்:

சுரண்டல் பேர்வழிகளும், ரெளடிகளும், அதிகார வெறியர்களும், பேராசைக்காரர்களும், இந்த நகரவாசிகளை ஒடுங்கியும், ஒதுங்கியும் வாழுகிற அளவு கோழைகளாக்கி விட்டார்கள்! இனி இவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்து தங்கள், உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கச் செய்யவேண்டும்.”

“தங்கள் உரிமைகள் என்னென்னவென்றே இன்னும் இவர்களில் பலருக்குத் தெரியாது.”

“ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் புரியாத மாதிரி அடிமைகளுக்கு உரிமைகள் புரிவதில்லை சித்ரா?.”

“உரிமை உணர்வும், சுதந்திர எண்ணமும் சொல்லிக் கொடுத்து வரக் கூடியவை. இல்லையே? என்ன செய்யமுடியும்?”

“அவசியமும், அவசரமும் உண்டானால் அவை தாமே வா முடியும்."