பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

37



கவசப் படைகள், கனல்கக்கும் பீரங்கிகள் ஆயுதமேந்திய குதிரை வீரர்கள், காலாட்படைகள், சட்டம், அதன் சொரூபத்தைக் குடைபோல் விரித்துக் காட்டச் சட்ட நிபுணர்கள். யாராலும் தகர்த்தெறிய முடியாத 'பாஸ'டில்' என்ற உலகத்திலேயே பெயர் போன பயங்கரச் சிறையாகிய இவ்வளவுமே தன் பரிவாரங்களென நினைத்தான். பரிதாபத்துக்குரிய பார்த்திபன்.

'பாண்டில்' என்ற உடனே அகில ஐரோப்பாவுக்கும் குலைநடுங்கும். விளையாடும் சிறுவர்கள் உள்ளமும் ஒடுங்கும், சுதந்திரத் தந்தை ரூஸோவையும், புரட்சியின் கர்த்தாவும், பேனா வீரனுமான வால்டேரையும் அடைத்து வைத்திருந்த அபாயச் சிறை புண்ணியம் தேடும் கிருஸ்தவர்கள் ரோமாபுரிக்கும், முஸ்லீம்கள் மெக்காவுக்கும், இந்துக்கள் இராமேஸ்வரத்துக்கும், புத்த பிட்சுக்கள் கயாவுக்கும் போவதைப்போல, பிரான்சில் சுதந்திரப் பிரியர்கள் யாராயிருப்பினும் பாஸ்டிலுக்குப் போய்த்தான் தீரவேண்டும் - முன்னவர் ஆன்மார்த்தீகத்தால், பின்னவர், அரசியலாரின் அதிகாரத்தால்.

அங்கு ஒருதரம் சென்றுவந்தவன் மீண்டும் தான் விட்ட இடத்தைத் தேடுவானா என்பதும் சந்தேகந்தான். அவ்வளவு பயங்கரமான, யாராலும் தப்பித்துக்கொள்ள முடியாத, இருதயமே இல்லாத அதிகாரிகளால் காப்பாற்றப்பட்ட சிறை அது.