பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

85



வன்மையாகக் கண்டிப்பதில் யாருக்கும் பின்வாங்கியவனல்ல. அரசியல் துறையில், அகில உலகத்தைக் கட்டியாண்டு அதனால் வரும் தொல்லைகளை நீக்கவே தன் சொந்த நாட்டைப்பற்றி எடுத்துக்கொண்டிருக்கிற முயற்சி தளர்ந்துவிட்டாலும் தளர்ந்துவிடக்கூடும் என்று சந்தேகப்பட்டான். ஆகவே அரசியல் துறையில் முதலில் தன் நாட்டைக் கவனித்துப் பிறகு வேண்டுமானால் வெளிநாடுகளைக் கவனிக்கலாம் என்று கருதியிருந்தான். சில தொழில்கள் அரசாங்கத்தின் திறமையற்ற காரணத்தாலும் லஞ்ச ஊழலின் பயங்கரச் சதியாலும், வெற்றி பெறாமல் போவதால் சில தனிப்பட்ட தொழில்கள் தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கவேண்டும் என்பது மாஜினியின் கருத்து.

இதனால் மாநாட்டின் கருத்துக்களை முழுமனதோடு ஆதரிக்க முடியாத நிலையில் இத்தாலி திரும்பினான். மீண்டும் ஸ்விட்ஜர்லாந்துக்குப்போனான். என்றாலும் அந்த அரசாங்கம் இவனை எல்லைக்குள்ளே அனுமதிக்கவில்லை. வெளியே விரட்டிவிட்டார்கள். மரண தண்டனை யடைந்த குற்றவாளி! மனிதர்களை மிருகமாக்கி மாளிகைகளை மயானமாக்க நினைக்கும் மாபாதகன்! இவன் முகத்தில் விழிப்பதே மாபாதகம் - போ போ வெளியே போ! - உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று வெளியே தள்ளிவிட்டார்கள். இப்படி நடந்த ஆயிரந்தடவைகளிலே இது ஒரு தடவை. ஏளனச் சிரிப்போடு இத்தாலிக்குத் திரும்பினான்.