பக்கம்:சாவி-85.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. முதல் தரிசனம் கோபாலபுரம் கான்ரான்ஸ்மித் ரோடில் காஞ்சி மாமுனிவர் முகாமிட்டிருந்தார். சாவி அப்போது கோபாலபுரத்தில் வசித்து வந்தார். விகடனில் உதவி ஆசிரியராக இருந்த பூரீதரும் சாவியும் நெருங்கிய நண்பர்கள். அன்று மகா பெரியவர் ஒரு பங்களாவின் காம்பவுண்டுக்குள் மேனா என்கிற இருக்கையில் படுத்திருந்தார். சுவாமிகள் கண் விழித்து எழும்போது அந்த விசுவரூப தரிசனத்துக்காக சாவியும் பூரீதரும் காத்திருந்தனர். மங்கலான வெளிச்சம். வேறு மனித சஞ்சாரமே இல்லை. சுவாமிகள் துயிலெழுந்ததும் இவர்களைப் பார்த்து யாரு?" என்பதைப் போல சைகையால் வினவ நண்பர்கள் இருவரும் தரையில் வீழ்ந்து வணங்கினார்கள். அடுத்த கணமே 'இவர் பூரீதர். ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தார் சாவி. 'நீ யாரு?" என்று கேட்டார் பரமாச்சார்யாள். 'நானும் விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறேன். என் பெயர் சாவன்னா விசுவநாதன். சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகளின் புத்திரன். சாவி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார். மகாபெரியவரின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. 134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/144&oldid=824433" இலிருந்து மீள்விக்கப்பட்டது