பக்கம்:சாவி-85.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் "அப்படியா? சரி, பார்க்கலாம்” என்று கூறி விட்டுச் சென்ற ஜெயகாந்தன், திடீரென ஒருநாள் ஒவர் டைம் என்று ஒரு கதையை விகடனுக்கு அனுப்பி வைத்தார். கதையைப் படிக்கச் சொல்லிக் கேட்ட பாலு அவர்கள் அதை வெகுவாக ரசித்தது மட்டுமின்றி அடுத்த வார விகடனிலேயே பிரசுரித்தும் விட்டார். அப்போதெல்லாம் சிறுகதைக்கு உயர்ந்த பட்சம் அறுபது ரூபாய்தான் சன்மானம் அனுப்பி வந்தார்கள். ஜெயகாந்தனுக்கு எழுபத்தைந்து ரூபாயாவது அனுப்ப வேண்டும் என்ற சாவியின் யோசனையை திரு. பாலு அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயகாந்தன் விகடனில் எழுதிய முதல் கதை அதுதான். அதன் பின்னர் அவருடைய கதைகள் விகடனில் தொடர்ந்து பிரசுரமாயின. இதற்கிடையில் ஒவ்வொரு வாரமும் விகடனுக்கு வரும் சிறுகதைகளில் மிகச் சிறந்த கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை 'நட்சத்திரக் கதை' என்ற தலைப்பில் பிரசுரிக்கலாம் என்று சாவி சொன்ன யோசனையை அங்கீகரித்த பாலு அவர்கள் தலைப்பை மட்டும் 'முத்திரைக் கதை' என்று மாற்றினார். அப்புறம் பெரும்பாலும் ஜெயகாந்தனின் கதைகளே முத்திரைக் கதைகளாகத் தீர்மானிக்கப்பட்டு வெளிவந்தன. முத்திரைக் கதைக்கு நூறு ரூபாய் சன்மானம் என்றாலும் ஜெயகாந்தனுக்கு மட்டும் ஒரு ரூபாய் உயர்த்தி 101/= ரூபாயாக அனுப்பப்பட்டது. காரணம் தனக்கு ஒரு ரூபாயாவது அதிகம் தர வேண்டும் என்று ஜெயகாந்தன் விரும்பினார். மற்ற எழுத்தாளர்களைக் காட்டிலும் தான் உயர்ந்தவன் என்பதைக் காட்டிக் கொள்ளவே அவர் அவ்வாறு விரும்பினார். ஜெயகாந்தனின் கதைகள் விகடனில் தொடர்ந்து வந்த போதிலும் விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஜெயகாந்தனுக்குக் கிட்டாமலேயே இருந்தது. 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/197&oldid=824548" இலிருந்து மீள்விக்கப்பட்டது