பக்கம்:சாவி-85.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அவையோர் பலத்த கைத்தட்டலுடன் சாவியின் பேச்சை ரசித்தார்கள், கலைஞருடன் சாவிக்கு ஏற்கனவே லேசான பழக்கம் இருந்தபோதிலும் அந்த விழாவுக்குப் பிறகுதான் அது பலப்பட்டது. அதன்பிறகு கலைஞரின் நண்பர்கள் வட்டத்தில் இடம் பிடித்த சாவி இன்று வரை அவரின் மிக நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். தம்முடைய விடாமுயற்சியாலும், திறமையாலும் தினமணி கதிர் விற்பனையைப் பெருமளவு உயர்த்தியும் கூட ஆசிரியர் பதவி தருவதாக நிர்வாகம் சாவிக்கு அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமலேயே காலம் கடந்து வந்தது. சாவியும் விடாப்பிடியாக நிர்வாகத்துடன் போராடிப் போராடி கடைசியில் வெற்றி கண்டார். ஒரு நாள் அவரே எதிர்பாராத நேரத்தில் பத்திரிகையின் இம்ப்ரிண்ட்"டில் ஆசிரியர் : சாவி என்று வெளியாகியிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டார். அடுத்த வாரம் விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து சாவிக்கு ஒரு கடிதம் வந்தது. 'தங்களுடைய நீண்ட கால ஆசை இப்போது வெற்றி கரமாக நிறைவேறியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்த்துக்கள்.' தம்முடைய ஆசை முழுமையாக நிறைவேறியது ஒரு பக்கம். தம்முடைய பெருமதிப்பிற்குரிய ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் பாலு அவர்களிடமிருந்து வந்திருந்த பாராட்டுக் கடிதம் இன்னொரு பக்கம். சாவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/234&oldid=824631" இலிருந்து மீள்விக்கப்பட்டது