பக்கம்:சாவி-85.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மாம்பாக்க நாட்கள் அந்தக்கால கிராமத்துக்குரிய அனைத்து 'சாமுத்ரிகா லட்சணங்களோடும் அமைதியாக இருந்தது மாம்பாக்கம். வட ஆற்காடு மாவட்டத்தில் மற்ற எல்லா கிராமங்களைப் போலவே அதுவும் ஒரு கிராமம். ஈசுவரன் கோவில், பெருமாள் கோவில், கருட கம்பம், பிள்ளையார் கோவில் என்று எல்லாமே இருந்தன. வயல்களுக்கப்பால் சற்று தொலைவில் பெரிய ஏரி. அதைத் தொடர்ந்து சிற்றேரி, குளம், குட்டை, ரோடு ஒரப் புங்க மரம், திண்ணை வைத்த வீடுகள் என்று அது ஒரு செழுமையான கிராமம். சாமா சுப்பிரமணிய சாஸ்திரியின் வீடுதான் அக்ரகாரத்தில் பெரிய வீடு. மனைவி மங்களம்மாவுடன் ஆசார சீலராய் கொஞ்சம் நிலபுலத்தோடு தானுண்டு தன் சமஸ்கிருதப் புலமை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார் சாஸ்திரிகள். மீனாட்சி, கண்ணம்மா (எ) கமலம் ஆகிய இரு மகள்களுக்கு அடுத்து 1916 ஆகஸ்ட் 10ம்தேதி சாஸ்திரிகளுக்கு ஒரு மகன் பிறந்தான். காசி யாத்திரை போய் வந்தபின் பிறந்ததால் விசுவ நாதன் என்று பெயர் வைத்தார். பெற்றோரால் அவனைப் படிக்க வைக்க முடியவில்லை என்பதைவிட, படிப்பில் விசுவநாதனுக்குப் பெரிய மோகம் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/27&oldid=824711" இலிருந்து மீள்விக்கப்பட்டது