பக்கம்:சாவி-85.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் முடியாது. திடீரென்று சாவி அரவணைத்துக் கொண்டு அரங்கேற்றுவார். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சாவியினுடைய வெற்றியின் ரகசியம் விரைவு. வெகு விரைவு. அநியாயமான விரைவு. அதே நேரம் அந்த விரைவு செயலினுடைய நேர்த்தியை ஒருக்காலும் குறைத்து விடாது. செயல் விரைவாகவும் இருக்க வேண்டும். அதே நேரம், சீராகவும் இருக்க வேண்டும். யோசித்து இது நல்ல விஷயம் என்று தெரிந்து விட்டால் நான்கு நாட்கள் ஆறப் போட்டு செய்வது என்பது சாவிக்குச் சற்றும் பிடிக்காத விஷயம். ‘சாவி பத்திரிகை ஆரம்பித்தபோது செய்திகளைக் கட்டுரையாக்கிக் கொடுக்கின்ற சில வேலைகளுக்கு என்னைப் பணித்தார். ஆனால், என்னுடைய எண்ணமெல்லாம் எழுத்தாளராகி, நாவலாசிரியராக மாற வேண்டும் என்பதிலேயே இருந்தது. தான் வாழ்க்கையில் முன்னேற அதிகம் சிரமப்பட்டதாலோ என்னவோ, மற்றவருக்கு வாய்ப்புக் கொடுப்பதில் சாவி அவர்கள் வள்ளலாகவே இருந்திருக்கிறார். அவரை அண்டியவர்களை மேலே தூக்கி விடுவதில் பெருங்கருணை மிக்கவராகவே வாழ்ந்திருக்கிறார். ஒருநாள் சாவி அவர்கள் என்னைப் பார்த்ததும், நாவல் எழுத வேண்டும், தொடர்கதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். உடனடியாக அடுத்த வாரம் தொடர்கதை எழுதுவதற்கு ஏற்பாடு செய். ஐந்து வாரங்கள் தொடர்கதையைப் பார்ப்பேன். அந்தத் தொடர்கதை சுவாரசியமாக இருந்தால் மேற்கொண்டு தொடரும். இல்லை யெனில் ஆறாவது வாரம் நிறுத்தப்பட்டு விடும். இதற்குச் சம்மதமானால் எழுது என்று சொன்னார்கள். ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு தொடர்கதையை மறுபடியும் படித்து, மூன்றாம் முறையாகத் திருத்தி எழுதி, முதல் மூன்று அத்தியாயங்களைக் கொண்டு போய்க் கொடுத்தேன். 283

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/301&oldid=824767" இலிருந்து மீள்விக்கப்பட்டது