பக்கம்:சாவி-85.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஆதித்தனாரின் பெருந்தன்மை எட்டு மாதங்களுக்குப் பின் (ஒரு மாதம் நன்னடத்தை தள்ளுபடி) விடுதலை பெற்ற சாவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் ஒரு குழப்பம். மகாத்மாவும், நேருஜியும், படேலும் மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களும் லட்சோப லட்சம் விடுதலைப் போராட்ட வீரர்களும் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருந்தார்கள். தேசம் விடுதலை அடைந்த பாடில்லை. எப்போது அடையும் என்றும் தெரியவில்லை. வங்காளத்தில் தலைவிரித்தாடிய பயங்கரப் பஞ்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினியால் மாண்டு மடிந்து கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தின் ஒளி புலப்படாமல் தேசம் இருளில் ஆழ்ந்து கிடந்தது. எந்த வேலையும் இல்லாமல், என்ன செய்வதென்றும் புரியாமல் வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார் சாவி. அப்போது அவர் குடும்பம் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்ததால் லிங்கி செட்டித் தெருவில் ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒரு சின்ன அறையில் வசித்துக் கொண்டிருந்தார். சிறையில் அவருடன் மிக்க நட்போடு பழகிய நண்பர் எஸ்.ஏ.ரஹீம் சாவிக்கு முன்பாகவே விடுதலையாகி விட்டார். ‘ரயில் சிநேகம்', 'ஜெயில் சிநேகம்' என்பதெல்லாம் நிரந்தரமாகத் தொடர்வதில்லை என்பது அனுபவப்பூர்வமான உண்மை என்றாலும் ரஹீம் மட்டும் சாவியை மறக்கவில்லை. ஒருநாள் திடீரென்று அவரைத் தேடி லிங்கி செட்டித் தெரு விலாசம் கண்டுபிடித்து வந்து விட்டார். 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/69&oldid=824887" இலிருந்து மீள்விக்கப்பட்டது