பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

87


யோசிக்கிறோம். அதுக்கு எப்படியும் எட்டாயிரம் ரூபாய் வேணும். இந்த மார்ச்சுக்குள்ள நடக்காது. ஏப்ரல் மே வரட்டும். முடிச்சிடலாமுன்னு முந்தாநாள்தான் ஒப்பிலியப்பன்கிட்ட சொன்னேன். இவரு நேத்து என்ன செய்திருக்கார் தெரியுமா? அமைச்சரைப் பார்த்து, குடிநீர் திட்டத்தை இந்தமாதம் இருபத்தெட்டாம் தேதி செயல்படுத்த 'டேட்' வாங்கிட்டு வந்திருக்கார், பாத்திங்களா இவரு செய்த காரியத்தை, குறுக்குச் சுவர் இல்லாட்டா கட்டடம் குறுக்கே விழுந்தாலும் விழலாம். அதோட என் தலையும் விழுந்துடும். நான் இப்போ என்ன பண்ணட்டும்..?"

"நான் என்ன அண்ணா பண்றது? சும்மா செகரெட்டேரியட் பக்கமா போனப்போ, அமைச்சர் தற்செயலாய் என்னைப் பார்த்துட்டு, 'ஏய்யா நான் ஒங்க ஊருக்கு வர வேண்டாமா'ன்னு கேட்டார். உடனே அமைச்சர்கிட்ட பேசுற படபடப்புல 'குடிநீர் குழாய திறந்து வைங்க'ன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவரு என்னடான்னா பி.ஏ.-யைக் கூப்பிட்டு குறிச்சிக்கிட்டார். நான் என்ன பண்ணட்டும்? நீங்க அமைச்சர் வாரத விரும்ப மாட்டிங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சு... குடிநீர் வராததனால குடி முழுகிடப் போயிடாது... வேணுமுன்னா இப்பவே அண்ணங்கிட்ட போயி கேன்ஸல் பண்ணிடுறேன்..."

ஆணையாளருக்கு ஒப்பிலியப்பன் தன்னை, பிடிக்க வேண்டிய இடத்தில் பிடிப்பது புரிந்துவிட்டது. விவகாரத்திற்கு வேறு கலர் கொடுக்கப்படுவதால் அவரது முகத்தின் கலர்கூட மாறிவிட்டது.

"நான் அதுக்காகச் சொல்லல... தலைவரே! நம்ம அமைச்சரை நான் வராண்டாமுன்னு சொல்லுவேனா..? ஆல்ரைட்... பி. டபிள்யூ. டி. என்ஜினியருக்கு எழுதிடுறேன். வாட்டர் போர்டு ஆசாமிகளுக்கும் எழுதிடுறேன். இருப்பத்தஞ்சாம் தேதிக்குள் குறுக்குச் சுவர் எழுப்பிடலாம். தலைவரே! டோண்ட் ஒர்ரி... ஜமாச்சிடலாம்... அப்புறம் பேச்சாளர் லிஸ்டை போட்டுக்குவோமா, இல்ல. நீங்களே..."

"அது எப்படி ஸார்... உங்களைக் கேட்காம..."

"ஆல்ரைட்... கலெக்டர் தலைமை தாங்குவார்..."