பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வாழ்க்கைப் பாக்கி


மூளைக்குள்ளே முடிச்சை அவிழ்க்கப் போன பாட்டிக்கு அவள் மகன் ராமய்யா போட்ட கூப்பாடு, கிணத்துச் சத்தமாய் கேட்டாலும், அவளும் அதில் குடியிருக்கும் தவளையானாள்.

'என்னை பெத்த அம்மா.. என்னை அநாதையா விட்டுட்டு போயிட்டியே... எம்மோ'....

ராமய்யாவை, நான்கு பேர் செல்லமாக அதட்டுவது கேட்டது. மகனின் தலை, தனது தலையில் மோதுவதை பாட்டி, வாதையாக உணர்ந்தாள். அப்போதுதான் தனக்கு தலை இருப்பது தெரிந்தது. அப்படித் தெரியத் தெரிய மூளையில் ஏதோ ஒன்று புதிதாய் பதிவு செய்தது. மானசீகமாகப் பேசியது.

'அழாதேடா... என் ராசா... நீ அநாதை இல்லடா... என்ஜினியர் மகனும், டாக்டர் மருமகனும்... சின்னச்சிறு பேரக் குட்டிகளுமாய்... சொத்தோடும் பத்தோடும் இருக்கிற நீ அநாதை இல்லைடா... அப்படிப் பார்த்தா, இந்த அம்மாதாண்ட் நாதியத்த மூளி... ஆனா ஒண்ணுடா... டாக்டர் காந்தராசு சொன்னது மாதிரி... ஆஸ்பத்திரிக்கு என்னை எடுத்துட்டுப் போயிருக்கலாம்... சாவுக்குப் பயந்து இப்படி பேசலப்பா... நான் பெத்த மவன், காசு பணத்த பத்தி கவலப்படாம, இந்த அம்மாவ.... கடைசி வரைக்கும் பிழைக்க வைக்கப் பார்த்தான்னு திருப்தியோட செத்துருப்பேன். சிரிச்சிக்கிட்டே நிறைவா போயிருப்பேன். அழாதேடா. வாய் வலிக்கும்'....

ராமய்யாவின் அழுகை முடிந்தபோது, இன்னொரு அழுகை தனித்து ஒலித்தது. பாட்டிக்கும் பட்டும் படாமலும் கேட்டது. மருமகள் உமாவின் அழுகை உரைநடையோடு கூடிய ஒப்பாரி அழுகை....

வந்துட்டிங்களா அப்பா! இதோ பாருங்க அப்பா! நான் மாமியாருன்னு மருந்துக்கும் நினைக்காமல்... தாய்க்கும் தாயா நினைச்ச என் தெய்வம். செத்துக்கிடக்கத பாருங்கப்பா .

வாய் மட்டும் செயல்பட்டு இருந்தால், பாட்டி வெளிப்படையாகவே சிரித்திருப்பாள் அப்பன்கரான் வந்துருக்கணும்... அவனோட சாதி சனமும் வந்துருக்கும்... அவங்க மெச்சறதுக்காக இப்படி அழுகிறாள்....