பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

103


பாண்டியன் அக்னி பி.ஏ. பி.இடி., பொதுச் செயலாளர் மாரிமுத்து அக்னி பி.எஸ்.சி., ஆகியோர், அக்னியைப் பார்த்து ஓடியபோது அவர்கள் கூட்டிவந்த கூட்டமே, அவர்களை ஒரங்கட்டிவிட்டு, பாய்ந்தது. அதற்குள் முழு உடம்பையும் காட்டிய அக்னிநாத்தை, அலாக்காகத் துர்க்கி தலையில்போட்டு கூத்தாடியது. அவன் நடித்துப் பாடிய 'அடே பைக்கா... படே சுக்கா' என்ற பாடலை ஆடி ஆடி இசைத்தது.

அக்னிநாத், கூட்டத்தில் மிதந்தான். கைவேறு கால்வேறாகவும், தலை தனியாய்க் கிடப்பது போலவும் காணப்பட்டான். அந்தக் கும்பலில் அடிக்கடி மூழ்கியும் போனான். யார் யாரோ கிள்ளுகிறார்கள். முடியைப் பிடித்து இழுக்கிறார்கள். கன்னங்களை வருடுகிறார்கள். அவை அத்தனையும் உபாதையின் உச்சம். ஆனாலும் வழக்கமான புன்னகையைப் படரவிட்டபடியே சிக்கிக் கொண்டிருந்த கைகளை மேலே தூக்கி, அங்குமிங்குமாய் ஆட்டினான். இதற்குள் 'இயக்குநர் பிரமிப்பு' ஏகன், போலீசாரை கூட்டிவந்தான். அமைச்சருக்காக பாராவாய் வந்தவர்கள் ஆரம்பத்தில் யோசித்தார்கள். இவன், நீலகிரி மாவட்டத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு, பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி.யை, புரட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்ததை, ஏகன் அவர்களுக்கு நினைவுப்படுத்தினான். உடனே அவர்கள் அவனுக்கு முன்னாலேயே ஓடினார்கள். ரசிகப் பெருமக்களை லத்திக் கம்புகளால் நெம்பிநெம்பி, அக்னிநாத்தை வெளிப்படுத்தி, அவனைச் சுற்றி பாதுகாப்பு வளையமாய் நின்றுகொண்டார்கள். அப்படியும் பாய்ந்து வந்த ரசிகர்களை நோக்கி, லத்திக் கம்புகளை ஆட்டினார்கள். ரசிகப் பெருமக்கள் ஓரளவு அமைதிப்பட்டு, அக்னிநாத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அவனது திரைப்படப் பிம்பங்களில் முக்கால்வாசியே அவன் காணப்பட்டதில், திரைப்பட வித்தை தெரியாத அவர்களுக்கு சிறிது ஏமாற்றந்தான். ஆனாலும் அவன்மீது பதியம் போட்ட கண்களை எடுக்கவில்லை. சராசரிக்கும் அதிகமான உயரம் களையான தோற்றமோ இல்லையோ கலையான தோற்றம். தொப்புள் வரை பட்டன்போடாத சட்டை.. நிர்வாண மார்பு... அதற்கு கோவணம்போலான டாலர் செயின்.... காதுகளில் இருந்து தொங்கிய தங்கச் செயினின் இரு முனைகளையும் இணைத்து மார்பில் கவிழ்ந்த மூக்குக் கண்ணாடி போர்வீரர்கள்