பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

111


கேட்காமலே தலையாட்டிக் கொண்டிருந்த அக்னிநாத்தின் சட்டைக்காலரில், அமாவாசைக்காரன், ஒரு மைக்கைச் சொருகினான். இரண்டு கால்களை விரித்துப் போட்டு உச்சியில் சவாரி செய்த காமிராத் தலையை கோணப்படுத்தினான். அக்னிநாத்தும், தான் தாய்மாமா மகளை கட்டிக்கொள்ளப் போவதற்கான காரண காரியங்களை, ஏற்ற இறக்கமான குரலோடு ஒரே டேக்கில் பேசிவிட்டான். பதினைந்து நிமிடம் பறந்து விட்டது. இனி அக்னிநாத்தை கட் பண்ணி, இடையிடையே கயல்விழியையும் கட்பண்ணி, மிக்ஸ் பண்ண வேண்டியதுதான் பாக்கி.

உள்ளறையிலிருந்து தள்ளாடி வந்த அத்தைக்காரி, திண்ணையில் நின்றபடியே. கணவனை கண்ணடித்து கூப்பிட்டாள். அவர் பார்க்காததால், பிறகு கையடித்துக் கூப்பிட்டாள். ஓடிவந்து ஒட்டிக் கொண்ட கணவரின் காதில் கிசுகிசுத்தாள். அவர் வலி பொறுக்காதவர்போல் 'முனுசாமி! கொஞ்சம் வாரியாப்பா...' என்று ஊளையிட்டார். கூடவே எழுந்த இயக்குநர் பிரமிப்பை, ஒரு குட்டு குட்டி, உட்காரவைத்துவிட்டு, அக்னிநாத், தாய்மாமாவை நெருங்கி, அத்தையை நெருக்கினான்.

'கற்பூர வாசனை அந்தக் கழுதைக்குத் தெரியலியே!'

'என்ன மாமா சொல்றீங்க?'

'ஒன்னக் கட்டிக்க மாட்டாளாம். வலிய வந்த சீதேவிக்கு கதவச் சாத்துறாள் மூதேவி.'

அக்னிநாத் ஆடிப்போனான். ஐந்தேமுக்கால் அடி உடம்புக்கு மேல் ஊடுருவி ஆகாய முட்டியும் பாதங்களுக்குக் கீழே அகலபாதாளம் தட்டியும் விஸ்வரூபமாய் எழுந்துநின்ற அவன் பெருமிதம் அரையங்குலமாய் சுருங்கியது. அதுவும் அழுகிப்போவதுபோல் நசிந்தது. ஆத்திரம் தலைச் சுற்றலாய், ஆவேசம் காதிரைச்சலாய், அதிர்ச்சி இருள்மயமாய் அவனை ஆக்கிரமித்தன. சிறிது நேரம் எதுவும் பேசாமல் உடம்பைகத் தரையை நோக்கி சுருக்கிக் கொண்டே போனான். அந்த சுருக்கத்தை சரி செய்யாமலே, யாரோ யாருக்கோ பேசுவதுபோல் பேசினான்.