பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அவள்…. அவளாக….


வர்த்தினி, கோப்புக்களை கடிகாரத்தின் பெரிய முள்ளாக பார்த்து. வினாடி முள்ளாக இயங்கிக் கொண்டிருந்தாள். பகல் உணவு வேளை வந்தது. கேன்டினில் கேட்ட ஓசையினால் மட்டுமே புரிந்தது.

வர்த்தினி, உணவு பறிமார வந்த கேசவனை கையாட்டிப் போகச் சொல்லிவிட்டு, கேரியரைத் தூக்கிக் கொண்டு அந்த அறைக்குள்ளே குட்டி போட்ட இளைப்பாரும் அறைக்குள் போனாள். அவளை அவளையும் மீறி கடந்த கால நிகழ்ச்சிகள் நினைவு படுத்தின. இந்நேரம் நந்தினி ஒரு சப்பாத்தியை கொண்டு வந்து கொடுப்பாள். பட்டிலும் மென்மையானது. கேசவன் அவளுக்குப் பிடித்த நார்த்தங்காய் ஊறுகாயை கொண்டு வருவார். ராமசாமி ஒரு கைப்பிடித் தயிர்ச் சாதத்தை கொண்டு வந்து தட்டில் வைப்பான். அவன் மனைவிக்கு என்ன மாயம் தெரியுமோ, மந்திரம் தெரியுமோ பார்ப்பதற்கு பரம சாதுவாக தெரியும் தயிர்ச் சாதம், வாய்க்குள் போனவுடன் காரமாகும்... மணமாகும்... உண்டறியாச் சுவையாகும். 'சாப்பிடுங்கம்மா... சாப்பிடுங்கம்மா...' என்ற கெஞ்சல்கள் எழும்.

மேடம் வர்த்தினி சுதாரித்துக் கொண்டாள்... அவள் சாப்பாட்டு ராணியல்ல. அலுவலக அரசி... அதுகள சாப்பாடு போட்டே தன்னைச் சாப்பிட அனுமதிக்க முடியாது -- சாப்பாட்டை விட முக்கியம் அந்தஸ்து. ஒப்புணர்வைவிட பெரியது பதவி -- அதன் கவுரவத்த காப்பாத்தனும்.

வர்த்தினி, சுழல் நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். அந்தக் குளிர்சாதன அறையிலும் அவள் உடல் வேர்த்தது. நேரம் ஆகஆக, எதையோ ஒன்றை இழந்தது போன்ற பாதிப்பு. சுதந்திரமாய் சக இனத்துடன் உயரப் பறந்து திரிந்த பறவை ஒன்று, திடீரென்று புலியாக உருமாற்றம் பெற்று குகைக்குள் இருப்பது போல் ஒரு பிரமை. அந்த அறையே அவளுக்கு ஒரு காடானது. ஆள் அரவமற்ற சூனியம். ஆனாலும் சூனியத்தில்தான் சூட்சுமம் இருப்பதை கண்டதுபோன்ற பிடிவாதம்...

இதற்குள் தொலைபேசி குரலிட்டது. அந்தக் குரலை கையால் அடக்கியபடியே வர்த்தினி பேசினாள்.