பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

சிக்கிமுக்கிக் கற்கள்


பத்தில் மூன்றாக கனத்த அடிவயிற்றைப் பிடித்தபடியே, பார்வதி நிற்பதும் நடப்பதுமாய் போனாள். அண்ணாந்தும் கவிழ்ந்தும் பார்த்தவள். பின்னர், சுற்றுமுற்றும் நோக்கி, சூன்யமாய் நின்றாள். அந்த சூன்ய்த்தை சுற்றுச்சூழல் வக்கரித்துப் பார்த்தது. சிறிது தொலைவில் உள்நோக்கிப் பாய்ந்த மலைப்படுகை... மலையின் அடிவாரத்துக்குக் கீழே போன பாறைப் பள்ளத்தாக்கு.... அந்தப் பகுதிமேல், அப்படியே கவிழ்ந்த ஆகாயம். மண்சட்டியில் வெள்ளைக்கிண்ணத்தை தலைகீழாய் கவிழ்த்த தோரணை. இவள் நிற்கும் பாதையும், நீள நடந்து, அதே பாதாள படுகையில் கீழ்நோக்கி விழுகிறது. அது விழுந்த இடத்தின் எதிர்ப்புறம், ஒரு காலத்தில் கம்பீரமாய் நின்று. இப்போது படுத்துக்கிடக்கும் குற்றுயிரும் குலையுயிருமாய் துடிக்கும் மலை. இதன்மீது, ஆண்டுக்கணக்கில் நடத்தப்பட்ட சித்திரவதைகள், அதன் செடிகொடி ரோமங்களைக் கொண்ட மண் தலையை கொய்துவிட்டன. ஆங்காங்கே அதன் கருநீல எலும்புகள் உடைபட்டு, நாடிநரம்புகள் வெள்ளை வெள்ளையாய் நைய்ந்து கிடக்கின்றன. இப்போதும், அதன் அடிவயிற்றில் வெடிகள் வைக்கப்பட்டு பாறைச்சதைகள் பிய்ந்து விழுகின்றன. குய்யோ முறையோ என்கிற கூக்குரலோடு கற்கள் பறக்கின்றன. அந்த மலையே குலுங்கி அழுவதுபோன்ற ஒலம். அந்த அழுகைக்கு இடையே ஏங்குவது போன்ற இயந்திரச்சத்தங்கள்.... அழுதழுது களைத்துப்போய், ஆசுவாசப் படுவது போன்ற சம்மட்டிச் சத்தங்கள்.

பார்வதியின் உடம்பை, அவள் கால்கள் இழுத்துக்கொண்டு போகின்றன. நடக்க நடக்க, மனமும் நடக்கிறது. முன்னோக்கியும் பின்னோக்கியும் அலைபாய்கிறது. ஒவ்வொரு நினைவுக் கொடூரமும், தனித்தனியாய் வராமல், கூட்டாய், கலப்பாய், கும்பல் கும்பலாய் ஒன்றோடு ஒன்று பின்னியபடியே தலை கால் காட்டாமல் சாயாய்கிரகமாய் நிழலாடுகிறது.

முதலிரவுக்கு மறுநாள் அவளும் அவனும் விவசாயக்கூலிகளாய், ஆளுக்கொரு வரப்பில் வாய்க்கால் இடைவெளியோடு நடக்கிறார்கள். அவன் தோளில் மண் வெட்டி கவ்விக்கிடக்கிறது. இவள் கையில்