பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

157


பன்னருவாள் விளையாட்டுத்தனமாய் சுழல்கிறது. சிறிதுதான் நடந்திருப்பார்கள். சோளத்தட்டைகளுக்குள் பதுங்கிக் கிடந்த ஒரு கும்பலில், அடையாளம் தெரியாத ஒரு முகம், இவர்களைப் பார்த்து அந்தக் கும்பலுக்கு அடையாளப்படுத்துகிறது. உடனே, பத்து பதினைந்து பேர், கத்தியும் வேல்கம்புமாய் இவர்களை துரத்தியதும், இவர்கள் தலை தெறிக்க ஓடியதும், இப்போதும் கண்முன்னால் நடப்பதுபோல் தோன்றுகிறது. உடனடியாய் அந்தத் தோற்றம், மாய்ந்து இன்னொரு நினைவுக் கொடூரம் முன்னிலையாகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு, காக்கிச்சட்டைக்காரர்கள், அவள் வீட்டுக்காரனை, விலங்குபோட்டு இழுத்துப் போகிறார்கள். இவள், தன் தலையில் அடித்துக் கொள்கிறாள். கூரைக்கம்பில் மோதி மோதி ரத்தம் சிந்துகிறாள். அதோடு அந்த நினைவும் அறுபட்டு வயல்காட்டு நினைவு மீண்டும் வருகிறது. துரத்தும் கும்பலில் ஒருத்தன், இவர்களை நெருங்கி, இவள் கழுத்துக்கெதிரே, அரிவாளை ஓங்குகிறான். உடனே பார்வதியின் கணவன், அனிச்சையாகவோ அல்லது உத்தி தெரிந்தோ தோளில் தொங்கிய மாப்பிள்ளைத் துண்டை எடுத்து, வெட்டரிவாள்கார்ன் முகத்தை முக்காடு போடுகிறான். சாதிக்கலவர எதிரியின் முகம் பன்னாடைக்குள் சிக்கிய பனங்காயாய் ஆனபோது, இன்னொருத்தன் நெருங்கி வந்து, அவன் தலைக்கு, வேல் கம்பை குறிவைக்கிறான். உடனே இவன் இடது தோளை அப்பிப்பிடித்த மண்வெட்டியால், வேல்கம்பை வீழ்த்திவிட்டு, அவன் கழுத்தில் ஒரு போடு போடுகிறான். அரிவாள்காரன் அடியற்று சாய்கிறான்.

இதுபோதும் என்ற மனம், பார்வதிக்கு இன்னொரு நினைவை கொண்டுவருகிறது. இந்தப் பகுதிக்கு அரசாங்கச் ஜீப்பில் கோட்டும் சூட்டுமாய் வந்தவர்களிடம் இவள் வாயை விற்று விடுகிறாள். விற்றாள் என்பதைவிட இந்த மலைப்பகுதி மனித கொடுரங்களை இவளிடம் இருந்து அவர்கள் வாங்கி விடுகிறார்கள். விவகாரம் மலை மேஸ்திரிகளின் முக்கிய கொம்பன்களின் காதுகளை எட்டுகிறது. இவளுக்கும் அவனுக்கும், கெடு வைத்துவிட்டார்கள். இந்த பகுதியை விட்டு மூன்று நாட்களுக்குள் வேளியேற வேண்டும். இல்லையானால் நடப்பது வேறாம் என்ற மிரட்டல்.