பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சிக்கிமுக்கிக் கற்கள்


அவள் மனத்தளத்தில் மலைக்கார கொம்பன்கள் போய், மீண்டும் கிராமத்து வம்பன்கள் வருகிறார்கள். இவர்களை துரத்திய அந்தக் கும்பல், கீழே விழுந்தவனை தூக்குகிறது. இவர்களோ, அடுத்த சாதிக்காரன் அதிகமாய் வாழும் ஊர்ப்பக்கம் போகாமல், அப்படியே கட்டிய துணியோடு காடுமலை தாண்டி, ஓடாக்குறையாய் நடந்து, தென்காசியில் ரயில் ஏறி, தாம்பாரத்தில் இறங்கி, இடமறியா இந்தப் பகுதிக்குள் இடறி விழுகிறார்கள்.

இந்த நினைவை மீறி மீண்டும் மலைக்கொம்பன்கள் மன பிம்பங்களாகிறார்கள். அவர்களிடம் நயந்தும் பயந்தும் பேசிய இவள் வீட்டுக்காரன், இறுதியில் வேளியேற முடியாது செய்யுறத செய்யுங்க என்கிறான். அவர்கள் மெல்லச் சிரிக்கிறார்கள். சரிப்பா இருக்க முடியுமுன்னா இருந்துட்டுப்போ என்று அவனை ஆழக்கண் போட்டு அகலமாய்ப் பார்க்கிறார்கள்.

இப்போது அதே மனோதளத்தில், வீட்டுக்காரன் போய் மெகா போன்காரர்கள் வருகிறார்கள். போனவாரம் நடந்த கொடூரம்.... மொத்தம் பத்து பதினைந்து பேர்... அத்தனைபேரும் முகமறியா இளைஞர்கள்.... ஒருவன் மெகாபோனை எடுத்துக்கொண்டு 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்!', என்று உரத்துக் கூறுகிறான். தொழிலாளர் வரவில்லை. அடியாட்கள் தான் வருகிறார்கள். மெகாபோன்காரர்கள் மண்டையை இரண்டாக்குகிறார்கள். கூடவந்த தோழர்கள், அவனை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். மீண்டும் அவர்கள் ஆள்பலத்தோடு வருவார்கள் என்று, போனவர்கள் போனவர்கள்தான். அரைக்கிணறு தாண்டிய கதை. ஆபத்தான கதை.

இந்த நினைவுத் துரயரம் போய், மீண்டும் அவள் மனதுள் இன்னொரு நினைவுக் கொடூரம் நுழைகிறது. கட்டிய கணவன் விலங்கும் கையுமாய் அவளைப் பார்க்கிறான். ஆறுதல் சொல்ல முடியாமல் அழுகிறான். பிறகு, நம்முடைய இனத்தான்கள் என்ன கைவிடமாட்டாங்க. எப்படியும் சீக்கிரம் ஜாமீன்ல வந்துவிடுவேன் அதுவரைக்கும் இங்கேயே மூச்சைப்பிடிச்சுக்கிட்டு தாக்குப்பிடி என்கிறான். கைவிலங்கை வைத்து அவள் தலையை ஆசிர்வதிக்கிறான்.