பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

161


ஒவ்வொரு தொழிலாளிக்கும் சம்பளம் ரெட்டிப்பாகும். ஞாயிற்றுக் கிழமையிலும், நல்லநாளு, கெட்ட நாளிலும், வேலை செய்யாமலிலேயே கூலி கிடைக்குமுன்ன எப்படி பசப்பிட்டாங்க! நான் சொன்னத எல்லாம் மலை மேஸ்திரிங்கக்கிட்ட அப்படியே சொல்லிட்டாங்களே... அடுத்துக் கெடுத்த அயோக்கியப் பயலுகளா! உங்க ஜீப்ல லாரி மோதுண்டா... என்னைமாதிரி நிக்கதியாய் திரிவிங்கடா... வாய்க்கரிசி வேணுமுன்னா, அவனுங்கக்கிட்ட வாங்கிட்டுப் போகவேண்டியதுதானடா. கூடுதலா பணம் பறிக்க நான்தானடா உங்களுக்குக் கிடைச்சேன்? நீங்க நாசமாப் போக... ஏழையோட சாபம் எப்போதும் பலிக்குண்டா...

பார்வதி, தன்பாட்டுக்குப் பேசியபடியே, கால்களைத் தேய்த்துக் தேய்த்து நடந்தாள். ஊரில் எல்லையற்ற ஆகாயப்பரப்பையும் கண் தாவிய பசுமையான நிலப்பரப்பையும் ஊருறுவிய அவள் கண்கள், இங்கே திசைமறைத்த மலைகளையும் கூனிக்குறுகிப் போன நிலத்தையும் கண்முட்டப் பார்த்து, கால் தட்ட நடந்தாள். சுற்று முற்றிலும், கூட்டம் கூட்டமான கூலிப்பெண்கள்... ஒப்புக்கு ஒன்றிரண்டு ஆண் கூலிகள்... கூடவே பாளம்பாளமான சக்கைக் கற்கள். அவற்றில் சம்மட்டிகள் விழுவது தெரியாமல் எழுந்து, எழுவது தெரியாமல் விழுகின்றன. தாளலமான சத்தங்கள்... குறிதவறாத குத்துக்கள்... சக்கைக் கற்கள் கைக்கு அடக்கமாய் சிதறுகின்றன. இந்த சக்கைகளில், மெத்தப் படித்த பொறியாளர்களைப் போல வடிவுக்கு ஏற்ப கோடுகளோ வரைபடங்களோ போடப்படவில்லை. ஆனாலும், ஆங்காங்கே இயங்கும் கூலிப்பட்டாளம் சாலைக்கான 'ஒன்றரையாய்', தளத்துக்கான 'முக்காலாய்', கான்கீரிட்டுக்கான 'காலாய்', ஒரு அனுமானத்தோடு, சக்கைக் கற்களை வெட்டி வீழ்த்தி சிதறடிக்கின்றனர். கையும் மனமும் ஒன்றுபட்டதால் அந்த அனுமானம் பொய்க்கவில்லை. அத்தனைப் பேருக்கும் வேர்வைக் குளியல். இவர்களது கையில் பெருக்கெடுத்த வேர்வை, சம்மட்டிக் கணையில் பெருக்கெடுத்து, கற்களுக்கு ஈரப்பதம் கொடுக்கிறது. அவ்வப்போது நிமிர்ந்து நெற்றியில் திரண்டும், மூக்கில் வழிந்தோடியும் கண்ணிமைகளில் தேக்கமாகவும் உள்ள வேர்வை நீரை ஒவ்வொருத்தரும், இடது கை ஆள்காட்டி விரலால் அங்குமிங்குமாய் வழித்து விடுகிறார்கள்.