பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

163


பார்வதி, அவர் முடிக்காத வார்த்தையை அர்த்தப்படுத்துகிறாள். யாராலும் கண்டுபிடிக்க முடியாத இந்த இடத்திற்கு போலீஸ்காரர்கள் வந்து 'அதை' இழுத்துக் கொண்டு போனதில் ஒரு சூது இருப்பது, இப்போது அவளுக்கு புரிகிறது. இனத்தான்கள் என்று நம்பி ஊரில் நடந்த சங்கதியை ஒரு சிலரிடம் ரகசியமாய் சொன்னது எவ்வளவு தப்பாப் போயிற்று! இல்லன்னா காகங்கூட நுழையமுடியாத இந்தக் காட்டுக்குள்ள திருநெல்வேலி போலீஸ் நுழையமுடியுமா...

பார்வதி, அவரை கணமாகப் பார்க்கிறாள். சொரிகல் பெண்களையும், மாவுக்கல், கருங்கல் பெண்களையும் நேருக்குநேராய் பார்க்கிறாள். கோபம்கோபமாய் முறைக்கிறாள். இவள்களின் தூண்டுதலால்தான், அப்படி உளறிக் கொட்டியதாக சொல்லிவிடலாமா என்றும் யோசித்தாள். பிறகு இவர்களாவது நல்லா இருக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே மறுபக்கமாய் மெல்ல நடக்கிறாள். கல்லுடைப்புப் பெண்களோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். காக்காய்ப் பொன் நிறத்தில் வசிடெடுத்து வாரிச்சுருட்டிய கொண்டையோடு கவ்விப்பிடிக்கும் கண்களைக் கொண்ட அவள், இப்போது பறட்டைத் தலையாய், பாழ்குழி கண்களாய் நிர்க்கதி பார்வையாய் பார்ப்பதில், அந்தக் கூலிப் பெண்களுக்கு குற்ற உணர்வு பெருக்கெடுக்கிறது. ஆத்திரமும் அழுகையும் ஏற்படுகின்றன. அதை, கல்லில் கடினமாகவும் வேர்வை சிந்தலாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.

இதற்குள், எல்லா திசைகளில் இருந்தும் ஆளுக்காள் ஓடுகிறார்கள். நான்கைந்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஒரு யந்திர மேட்டில் இருந்து குதிக்கிறார்கள். இங்கே நின்றவர்களும் கையுடைப்பு மேஸ்திரியிடம் சொல்லாமல் கொள்ளாமலேயே ஓடுகிறார்கள். எல்லா இடங்களில் இருந்தும், துளித்துளியாய் வந்தவர்கள். ஆறாய்ப் பெருக்கெடுத்து, அந்த முதலை வாய் பாதாளக்குகைக்குள் அருவியாய் பாய்கிறார்கள். அந்தப் பள்ளத்தாக்கே ஓலமிடுவதுபோல் தோன்றுகிறது. உரத்துக் கத்துவதுபோல் கேட்கிறது. பார்வதி மெல்லத்தான் நடந்தாள். ஆனாலும், கீழே எழுந்த கூக்குரல் மேலோங்க மேலோங்க, அவள், இதுவரை ஓடாத ஓட்டமாய் ஓடினாள்.