பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

சிக்கிமுக்கிக் கற்கள்


ஒடி ஒடி அந்தப் கல்படுகைக்குள் இறங்கி, கூட்டத்துள் முண்டியடித்து அதன் முகப்பிற்கு வந்துவிட்டாள். அங்கே கண் காட்சியை பார்த்துவிட்டு கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்.

நடுத்தரவயது பெண்ணொருத்தியின் காலில் விழுந்த பாறைக்கல்லை பத்து பதினைந்து பேர், எப்பூடியோ மேலே உருட்டி அதற்கு அணைபோட்டு நிற்கிறார்கள். அந்தப் பெண்ணின் வலது கால் சதைக்குழம்பாய் சிதைந்து கிடக்கிறது. செத்தாளோ... இருக்காளே... ஒரு முனங்கல் கூட இல்லை. அவள் கணவன், ஒரு கல்லை எடுத்து தனது தலையிலேயே குத்திக் கொள்கிறார். ஆரம்பத்தில் அவரை யாரும் பார்க்காததால் அவரும் தலைபிளந்து விழுகிறார். நான்கைந்து பெண்கள் ஒப்பாரி போடுகிறார்கள். அம்மாவுக்கு ஒன்றம் அப்பாவுக்கு ஒன்றுமாய் மாறி மாறி தலையில் அடித்துக் கொள்கிறார்கள். வாயில் குத்திக் கொள்கிறார்கள். கூட்டம், ஒட்டு மொத்தமாய் அய்யய்யோ என்று அரற்றுகிறயது. விசாரித்துப் பார்த்தால், வெடி மேஸ்திரி, ஒருவர் அந்தப் பெண்ணை சிதறிக் கிடக்கும் சின்னதும் பெரியதுமான கற்களை ஒன்று சேர்க்கும்படி சொல்லி இருக்கிறார். இவளும், வெடி வைப்பால், உருளும் நிலையில் இருந்த ஒரு பாறைக் கல்லுக்கு அணைகொடுத்த சின்னஞ்சிறு கற்களை பிடுங்கி இருக்கிறாள். இதனால் பாறைக்கல் உருண்டது. இவள் காலே அந்தக் கல்லுக்கு அணைப்பானது.

சேதிகேட்டு, ஏழெட்டு மலைமேஸ்திரிகள் நிதானமாய் ஆடியசைந்து வந்தார்கள். இப்படி நடப்பது சகஜம் என்பது போன்ற பார்வை, அதே சமயம், பார்வதியைப் பார்த்ததும் ஒரு முன்னெச்சரிக்கை; இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், முன்பு எதையுமே பேசாத அவர்கள், இப்போது உபதேசம் செய்ய நினைத்தார்கள். 'ஒருவருக்கொருவர் காதைக் கடித்துக் கொண்டார்கள். பின்னர் இவர்களில் ஒரு பெரிய கொம்பன் கூட்டத்தை இருகையாலும் ஆற்றுப்படுத்தியபடியே பேசினார். அவர் பேசப்பேச, அவரது கைக்கடிகாரம் சூரியக்கற்றைகளை ஒளிபரப்பியது. கழுத்துச் செயின் டாலடித்தது. பார்த்தாலே பயம் கொடுக்கும் முகத்தை பயமுறுத்துவதுபோல் வைத்துக்கொண்டு எதேச்சையாக பேசுவதுபோல் பேசினார்.