பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

7


செல்லாத்தா நிதர்சனத்தின் புலப்படாத - அதேசமயம் புரியக் கூடிய கரம் ஒன்று தலையில் அழுத்தியதுபோல் தரையில் உட்கார்ந்தாள். உள்ளே ராசகுமாரி, "ஏம்மா.. எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தால் இப்படி ஆவுமா... ஆவுமா..?" என்று குமுறிக் குமறி அழுதாள்.

செல்லாத்தா எழுந்தாள். ஊருக்குள் ஓடினாள். மகளும், தானும் அடிபட்ட அதே இடத்தில் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்த பெரிய மனிதர்களைப் பார்த்து பொதுப்படையாகப் பேசினாள்.

"அய்யாமாரே... நான் கூட என் பொண்ண அணைக்கதுக்காவ தொட்டிருக்கேனே தவிர அடிக்கத் தொட்டதுல்ல. அப்படிப்பட்ட என் அருமை மவள முத்துப்பாண்டி கைநீட்டி அடிச்சிட்டான்யா... இந்த அநியாயத்தக் கேட்டுத்தாங்கய்யா..."

ஒருவரும் கேட்டுத் தரவில்லையானாலும் ஒருவர் கேட்டார்.

'பேசாம போம்மா... அதோ முத்துப்பாண்டி வாரான். அனாவசியமாய் பழையபடியும் சண்டை வரும். நாங்க கூப்பிட்டுக் கண்டிக்கோம். நீ போ..."

"என்னய்யா இது? அடிச்சவனை அடிக்காம அடிபட்டவளைப் போகச் சொல்றீய... உங்க பொண்ண இப்படி யாராவது அடிச்சா..."

"இதோ பாரு. அனாவசியமாய் வீட்ல இருக்கிற பொண்ணுங்கள இழுக்காத..."

"தெருவுல நின்ன பொண்ண அடிச்சிட்டானே... அடிச்சிட்டானே..."

"இப்போ அவனைக் கொலை பண்ணச் சொல்றியா. நடந்தது நடந்துட்டு. அவனச் சத்தந்தான் போட முடியும். நீயும், அகத்திக்கீரைய, கேட்டுட்டுப் பறிச்சிருக்கணும். வயல் வயக்காட்ல ஒரே திருட்டாப் போச்சு... அருணாசலம் மச்சான்! நாம ஏதாவது பண்ணணும். நேத்துக்கூடி... என் தென்ன மரத்துல... சரி... நீ போம்மா..."

செல்லாத்தா போவதற்கு முன்பே முத்துப்பாண்டி வேட்டியை முட்டிக்குமேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக வந்து நின்றான். செல்லாத்தா கூனிக்குறுகி வீட்டுக்கு வந்தாள்.