பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வைராக்கிய வைரி


இரவில் தாயும், மகளும் சாப்பிடவில்லை. அடுப்போடு சேர்ந்து விளக்கும் எரியவில்லை. இருவரும் புரண்டு படுத்தார்கள். ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டார்கள். ஏங்கி ஏங்கி அழுதுகொண்டார்கள். அடிபட்ட இடங்களை அழுத்திக் கொண்டார்கள்.

இருவருக்கும் விடிவு இல்லாமலே பொழுது விடிந்தது.

ராசகுமாரி இன்னும் சுயத்திற்கு வரவில்லை. பழக்க தோசத்தில் எழுந்தவள் பழக்கமில்லாத நிகழ்ச்சியை நினைத்தாள். நினைவு அவளை நெருப்பாக்கிக் கட்டிலில் போட்டது. என்ன செய்வது என்று புரியாமல் செல்லாத்தா மகளையும், ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தபோது முத்துமாறி வந்தாள்.

"பேசாமக் காளியாத்த கிட்ட முறையிடு, இன்னைக்கு வெள்ளிக்கிழம. நல்ல நாளு காளியாத்தா பழி வாங்கிக் காட்டுவாள்."

செல்லாத்தா, முத்துமாரியைப் பார்க்காமலும் - பதிலளிக்காமலும் காளி கோவிலுக்குப் போனாள். சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் காட்சியளித்த காளியின் களிமண் சிலையின் முன்னால் நின்று கூப்பாடு போடுவதுபோல் கூக்குரலிட்டாள்.

"காளியாத்தா... என்னோட மகள இல்லல்ல... ஒன்னோட மகள முத்துப்பாண்டி அடிச்சு அவமானப்படுத்திட்டான். அவன் கையில கரையான் அரிக்கணும். என் மகளோட குனிஞ்ச தலை நிமுறணும். ஒரு அறிகுறி காட்டு தாயே... அடுத்த வெள்ளிக் கிழமைக்குள்ள அவன் நாசமாப் போவனும்"

சொல்லி வைத்தாற்போல் கவுளி அடித்தது. ஏழெட்டுத் தடவை, காளியம்மன் சிலையின் பின்புறம் 'டக்டக்'கென்ற சத்தம். செல்லாத்தா குலுங்கக் குலுங்க அழுதாள். "நீ இருக்கே தாயே இருக்கே" என்று சொல்லியபடியே உடைந்த சட்டி ஒன்றில் இருந்த குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றியில் பூச மறந்தவளாய் நேராக வீட்டுக்கு வந்தாள். கட்டிலில் அலைமோதிக் கொண்டிருந்த ராசகுமாரி நெற்றியில் குங்குமத் திலகமிட்டபடியே, "காளியாத்தா வரம் கொடுத்துட்டாடி... அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள என்ன நடக்குதுன்னு பாரு" என்றாள் கம்பீரமாக. ராசகுமாரியும், ஆறுதலடைந்தவள் போல் எழுந்து உட்கார்ந்தாள்.